×

காவல்துறைக்கு எதிரான வழக்குகளில் இயந்திரத்தனமான உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது: மாஜிஸ்திரேட்டுகளுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: காவல்துறைக்கு எதிரான வழக்குகளில்  ஆவணங்களை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இயந்திரத்தனமான  உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது என்று மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த வக்கீல் பாலசுப்பிரமணியம் என்பவர் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாக கூறி ஆர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதுபற்றி விசாரணை நடத்தி, குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வழக்கை முடிப்பதாக இருந்தால் அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் திருவண்ணாமலை முதலாவது ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

 இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், வழக்கை முடித்து மனுதாரருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே அச்சிட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூர்த்தி செய்து உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட்டை கண்டித்ததுடன்,  திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

 இந்த உத்தரவின்படி விசாரணை நடத்திய தலைைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையில், பணி அழுத்தம் காரணமாக மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. அறிக்கையை பார்த்த நீதிபதி நிர்மல்குமார், எதிர்காலத்தில் இதுபோன்ற உத்தரவுகளை  பிறப்பிக்கக் கூடாது என்று திருவண்ணாமலை முதலாவது ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், காவல்துறைக்கு எதிரான வழக்குகளில் ஆவணங்களை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இயந்திரத்தனமான உத்தரவுகளை மாஜிஸ்திரேட்டுகள் பிறப்பிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். மனுதாரர் ஆர்த்தி கடந்த மே 24ம் தேதி அளித்த புதிய புகாரை முறையாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Tags : ICC , Police, Case, Magistrate, high court
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...