×

புகைப்படம் எடுக்க மறுத்த கவர்னர் காங்கிரசுக்கு ஒரு நியாயம் பாஜவுக்கு ஒரு நியாயமா?...மகிளா காங்கிரஸ் கண்டனம்

சென்னை: மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, எம்பிக்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோருடன் கடந்த 8ம் தேதி கவர்னரை சந்தித்து மனு அளித்தபோது, அவர், ‘புகைப்படம் எடுக்கும் பழக்கம் இல்லை’ என சொல்லி மறுத்தார். ஆனால், நேற்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையுடன் கவர்னர் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியிருப்பது அவரது மாற்றான்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கவர்னர் சனாதன, சங்பரிவார் அமைப்புகளுக்கு மட்டும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது என்பது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையதல்ல. தமிழக கவர்னர், பாஜ கட்சியில் ஏதேனும் மிகப்பெரிய பொறுப்பை எதிர்பார்க்கிறாரோ என எண்ணத்தோன்றுகிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. 2 எம்பிக்கள், எம்எல்ஏ உள்ளிட்டவர்களுக்கு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைக்கு கவர்னர் காட்டியிருக்கும் மேம்போக்கான அக்கறையின்மையை பார்க்கையில் அவரது நடுநிலைத்தன்மையின் மேல் சந்தேகம் வலுக்கவே செய்கிறது.

இதற்கு கவர்னர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மகளிருக்கு கவர்னர் அளிக்கும் மரியாதை சமூக இழுக்காகவே படுகிறது. மக்களுக்கான பிரச்சனைகளை களைவதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே அதீத பொறுப்புண்டு என்பதனை புறந்தள்ளி, தான் விரும்பும் ஒரு கட்சியின் தலைவருக்கு அங்கீகாரம் அளிக்கும் போக்கு கவர்னருக்கு அழகல்ல.

Tags : BJP ,Mahila ,Congress , Photo, Condemnation of Governor, Congress, BJP, Mahila Congress
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு