×

முதல் நாளிலேயே அசத்தல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: மகளிர் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு ‘வெள்ளி’யை தட்டினார்

டோக்கியோ: ஒலிம்பிக்  போட்டியின் பளுதூக்குதல் பிரிவில்  இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம்  வென்று   நாட்டின் பதக்க எண்ணிக்கையை தொடங்கியுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்  போட்டியில் நேற்று  தொடர்ந்து துப்பாக்கி சுடுதல், டேபிள்  டென்னிஸ், பேட்மின்டன், வில் வித்தை ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள்  தொடர்ந்து தோற்று ஏமாற்றத்தை அளித்தனர். வில்வித்தை கலப்பு  இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறி நம்பிக்கை அளித்த  தீபிகா  குமாரி-பிரவீன் ஜாதவ் இணையும்   தோற்றுப்போனது.

 இந்நிலையில்   மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு சைகோம் (26) நேற்று  பங்கேற்றார். அவர் ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச் முறையில் 87 கிலோவும்,    கிளீன் அன்டு ஜெர்க் முறையில்  115 கிலோவும் தூக்கினார். மொத்தம் 202 கிலோ  தூக்கி ஆட்டத்தில் 2வது இடம் பிடித்தார். அதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை  வசப்படுத்தினார். சீனாவின்  ஹு ஜிஹுய் மொத்தமாக 219 கிலோ தூக்கி தங்கம்  வென்றார்.  கூடவே ஸ்நாச் முறையில் 94 கிலோ தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையை  படைத்தார். இந்தோனேஷியாவின் ஐசா காண்டிகா  194 கிலோ தூக்கி  வெண்கலத்தை  கைப்பற்றினார். மீராபாயின் வெற்றியின் மூலம், இந்தியா முதல் பதக்கத்தை வென்றதுடன்  பதக்கப்பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.

 மணிப்பூர்   மாநிலம் இம்பாலை சேர்ந்த மீராபாய் சானு சைகோம்     சமீபத்தில்  தாஷ்கண்டில் நடந்த  ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் 49 கிலோ எடை பிரிவில்  வெண்கலம் வென்றிருந்தார். ஏற்கனவே 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்  போட்டியில் நூலிழையில்  பதக்க வாய்ப்பை இழந்தார். ஆனால் அடுத்த ஆண்டு   நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.  கூடவே  ஒலிம்பிக் போட்டியில்  பளு தூக்குதல் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரிக்கு  பிறகு பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை மீராபாய் பெற்றுள்ளார்.  

ஆஸ்திரேலியாவில் 2000ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்லேஸ்வரி  வெண்கலம் வென்றார்.   ஆனால் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற புகழை  மீராபாய் பெற்றுள்ளார்.  நாடு முழுவதிலும் இருந்து மீராபாய்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஜனாதிபதி, மோடி, ராகுல் வாழ்த்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கையை தொடங்கிய மீராபாய் சானுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரதமர் மோடி: மீராபாய் சனுவால் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. அற்புதமான செயல்திறன். பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது.

ராகுல் காந்தி: முதல் நாளிலேயே நம் நாட்டின் முதல் பதக்கத்திற்கு வித்திட்ட மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். தனது மகளை நினைத்து  இந்தியா பெருமை கொள்கிறது. சச்சின் டெண்டுல்கர்: பளு தூக்குதலின் முற்றிலும் அற்புதமான காட்சி.  காயத்திற்குப் பிறகு நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டு, இந்தியாவுக்கு ஒரு வரலாற்று வெள்ளியைப் பெற்ற விதம் முற்றிலும் பிரமாதமானது. நீங்கள் இந்தியாவை மிகவும் பெருமை அடைய செய்துள்ளீர்கள். இதேபோல் ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் மீராபாயை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள மீராபாய் சானுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு ஒளிமயமான தொடக்கம். தனது அபாரமான செயல் திறனால் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கும் மீராபாய் சானுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாயின் நம்பிக்கை
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த  மீராபாய், உடனடியாக தனது தாயாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, ‘இந்த தோல்வி எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.இனி போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை’ என்று கூறியுள்ளார். அப்போது அவரது அம்மா ஆறுதல் கூறியதுடன் ‘அவசரப்பட்டு முடிவு  எடுக்க வேண்டாம்’ என்றாராம். தொடர்ந்து பேசி மீராவின் மனதை மாற்றியுள்ளார்.  மீராவின் முடிவை அன்று அவர் தாய் தடுத்ததால், இன்று தாய்நாட்டுக்கு  பதக்கம் கிடைத்திருக்கிறது.

Tags : India ,Olympic Games ,Mirabai Sanu , Olympic, India, first medal, women's weightlifting, Mirabai Sanu
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு