×

மிகப்பெரிய நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கொரோனா பாதிப்பால் மக்கள் பல துயரங்களை சந்தித்து வரும்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இப்போது நான் நினைவு கூறுகிறேன். பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியைப் பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

ஆனால் கொரோனா தொற்றால் சமீபமாக, நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன். அதே போல், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும் போது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதன் காரணமாக, நாம் ஏராளமான உயிர்களை இழந்துவிட்டோம். இன்று இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இது நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நேரமல்ல. தற்போதைய பொருளாதார சூழலில், 1991 நெருக்கடி காலகட்டத்தை விடவும், வளர்ச்சியை நோக்கி முன்னேறும் நமது பாதையானது மிகவும் மோசமாக இருக்கிறது.

ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு, நம்முடைய முன்னுரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
1991-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்த 30 ஆண்டுகளில் அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் இந்தியா பல கட்டங்களாக முன்னேறி இருக்கிறது. இன்று இந்தியா மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உயர்ந்திருக்கிறது. கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் நாட்டு மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளோம். இந்த முயற்சியை மேற்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : former prime minister ,Manmohan Singh , Indian economy in deep crisis: Former Prime Minister Manmohan Singh worried
× RELATED மக்கள் நல திட்டங்களை...