‘கோவாக்சின்’ தடுப்பூசி கொள்முதல் விவகாரம்; ஊழல் புகாரால் பிரேசில் உடனான ஒப்பந்தம் ரத்து: பாரத் பயோடெக் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் விவகாரத்தை தொடர்ந்து, பிரேசில் உடனான தடுப்பூசி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 2 கோடி டோஸ்களை வாங்குவதற்காக பிரேசில் அரசு கடந்த பிப்ரவரி மாதம்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. முதற்கட்டமாக 4 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் பிரேசில் நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலம் அந்நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், பைசர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் விலை அதிகமாக இருப்பதாகவும், இவ்விவகாரத்தில் அதிபர் ஊழல் செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, ஒரு டோஸ் மருந்து 15 டாலர் என்ற அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் புகார் எழுந்ததால், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தை 324 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம், இந்தியாவில் பூதாகரமாக பேசப்பட்டதால், பாரத் பயோடெக் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிரேசில் நாட்டிடம் இருந்து எந்த முன்பணமும் நாங்கள் பெறவில்லை. உலகளாவிய அடிப்படையில் தடுப்பூசிக்காக செய்யப்படும் ஒப்பந்தத்தை பின்பற்றியே இந்த ஒப்பந்தமும் செய்யப்பட்டது’ என்று தெரிவித்தது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தம் பெரும் சர்ச்சையான நிலையில், பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் பிரேசில் நாட்டுக்கு நேரடியாக கோவேக்சின் தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாகவும், பிரேசில் அரசுடன் இணைந்து செயல்பட தடை ஏதுமில்லை எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘எங்களது இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிக்கான ஒப்பந்தம், பிரேசிலின் இரண்டு நிறுவனங்களுடன் போடப்பட்டது. தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எங்களது தடுப்பூசியை கொள்முதல் செய்ய பிரேசிலின் பிரீசிசா மெடிகமெண்டோஸ் மற்றும் என்விக்ஸியா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. தற்போது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், பிரேசில் நாட்டின் பிரேசிலிய மருந்து கட்டுப்பாட்டாளருக்கு நேரடியாக தடுப்பூசி சப்ளை செய்வதற்கு எங்கள் நிறுவனம் இணைந்து செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>