×

சோலையார் நிரம்பியது; பிஏபி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறை: வால்பாறையில் உள்ள சோலையார் அணை நேற்று நிரம்பியது. பிஏபி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள முக்கிய அணையாக சோலையார் அணை திகழ்கிறது. கடந்த மே மாதம் 15ம் தேதி காலை நிலவரப்படி 165 அடி உயரம் உள்ள அணையின் நீர் மட்டம் 3 அடியாக இருந்தது. படிப்படியாக பெய்த சாரல் மழையால் நீர்வரத்து அதிகரித்து, மே மாதம் 30ம் தேதி காலை நிலவரப்படி சோலையார் அணையின் நீர்மட்டம் 28.6 அடியாக இருந்தது.

தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவமழை சோலையார் அணையின் நீர்மட்டம் ஜூன் 22ம் தேதி காலை நிலவரப்படி நீர்மட்டம் 102.45 அடியாக உயர்ந்து 100 அடியை தாண்டியது. கடந்த 3 நாட்களாக மழை அதிகரித்து பெய்து வரும் நிலையில், நேற்று காலை 157 அடியாக இருந்த சோலையார் அணையின் நீர்மட்டம் பிற்பகல் 160 அடியை எட்டியது. மாலை 6 மணி நிலவரப்படி 161 அடியாக இருந்தது. மேலும் அணைக்க 5 ஆயிரம் கனஅடி நீர் வரத்து காணப்பட்டது. இந்நிலையில் உபரி நீர் பரம்பிக்குளம் அணைக்கு வழிந்து செல்கிறது.

அணையில் இருந்து 406 கனஅடி நீர் விடுவிக்கப்பட்டு, சோலையார் மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது. வெளியேறும் நீர் பரம்பிக்குளம் அணைக்கு, சோலையார் மின் நிலையம் இயக்கப்பட்டு 440 கன அடி நீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு செல்கிறது. பிஏபி திட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். பிஏபி பாசனத்திட்ட அணைகள் நிரம்பி வருவதால் பிஏபி பாசன திட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். சோலையார் அணை பகுதியில் 102 மிமீ, வால்பாறையில் 93 மிமீ, சின்னக்கல்லாரில் 115 மிமீ, லோயர் நீராறு பகுதியில் 90 மிமீ மழை பதிவாகி உள்ளது.

Tags : PAB , Solaiyar is full; Continued increase in water supply to BAP dams: Farmers happy
× RELATED ரூ.16 கோடி நிதி ஒதுக்கியும் பிஏபி பிரதான கால்வாய் சீரமைப்பு பணி தாமதம்