×

போலீசாரின் அறிவுரையை காது கொடுத்து கேட்பதில்லை; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்கள்: பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுகோள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் கோயில் கடற்பகுதியில் போலீசார் அறிவுரையை மீறி பக்தர்கள் குளித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உணர்ந்து பக்தர்கள் பொறுப்புடன் நடந்து கொ ள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி அனைத்து வழிபாட்டு தலங்களும் அதிகாலை முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டு தலங்களை ஒட்டியுள்ள கடல் மற்றும் ஆறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதியளிக்கப்படவில்லை. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடந்த 5ம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் முடி காணிக்கை செலுத்தினாலும் விடுதிகளிலும், வாடகை குளியலறைகளிலும் தான் பக்தர்கள் குளித்து வந்தனர்.

கோயிலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் நுழைய முடியாதவாறு தடுப்பு அரண்கள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். ஆனால் திருச்செந்தூர் கோயில் கடல் பகுதியிலிருந்து அரை கி.மீ., தூரத்தில் உள்ள அய்யா வைகுண்டர் கோயில் உள்ள கடல் பகுதியில் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர். அங்கு பாதுகாப்புக்கு குறைவான போலீஸ்காரர்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளதால், குளிப்பதற்கு திரண்டு வரும் பக்தர்களை அவர்களால் தடுக்க முடியவில்லை.

இந்த பக்தர்கள் கூட்டம் அய்யா வைகுண்டர் கோயில் கடல் பகுதியிலிருந்து அமலிநகர் வரை காணப்படுகிறது. மேலும் இந்த கடல் பகுதியில் பாறைகள் அடர்த்தியாக காணப்படுவதால் கடல் அலைகள் கரைகளுக்கு வந்து மோதுகின்றன. எனவே இந்த பகுதியில் பக்தர்களை குளிக்க அனுமதிப்பது, விபரீதத்திற்கு வழி வகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். கொரோனா 3வது அலை, ஆகஸ்ட் 3வது வாரத்தில் பரவலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Tiruchthur , Do not listen to the advice of the police; Devotees bathing in the Thiruchendur sea in defiance of corona prevention measures: Request to act responsibly
× RELATED திருச்செந்தூரில் பரபரப்பு: ரேஷன்...