தென்மேற்கு பருவமழை தீவிரம்; ஆழியார் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்த மழையால் ஆழியார் அணையின் நீர்மட்டம் நேற்று 100அடியை எட்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழை போதியளவு பெய்யாததால், 120 அடி கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் மே இறுதியில் 78 அடியாக இருந்தது. ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது.

சில நாட்கள் மட்டும் மழை பெய்ததால், அணைக்கு தண்ணீர் வரத்து போதியளவு இல்லாமல், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், இம்மாதம் துவக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் பருவமழை பெய்ய துவங்கியது. கடந்த இரு வாரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்த மழையால், ஆழியார் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர துவங்கியது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து வழக்கத்தை விட அதிகரித்தது.

இன்று காலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2200கன அடியாக இருந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. தொடர் மழையால் கடந்த 20 நாட்களில் அணையின் நீர்மட்டம் 32 அடி உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், ஆழியார் அணையின் முழுகொள்ளளவு 120 அடி எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணை நிரம்பி வருவதால், ஆழியார் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>