கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:கைத்தறி தொழில் குடிசை தொழில் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்பு கைத்தறி துணிகள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு எந்தவித வரிகளும் கிடையாது. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியதற்கு பின் கைத்தறி துணி, அதன் மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் 3 லட்சம் கைத்தறிகள் உள்ளது. கைத்தறியில் பட்டு அல்லது நூல் புடவை உற்பத்தி செய்யப்பட பஞ்சு நூல் சுத்தப்படுத்திய அல்லது முறுக்கேற்றிய நூல், கலர் நூல்,

பாவு நூல் பட்டுப்புடவை உற்பத்தி செய்ய பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுப்புழு கூடு வளர்ப்பு, பட்டு கூடு வளர்ப்பில் இருந்து கோரா பட்டு தயாரிப்பு, பாவு ஓட்டுதல், சப்பூரி ஓட்டுதல், சாயமிடுதல், தறி நெய்தல், துணி உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் என சுமார் 18 இடங்களில் மனித உழைப்புக்கு வேலை வாய்ப்புள்ளது. இத்தொழில் சார்ந்து 50 லட்சம் பேர் வேலை வாய்ப்பில் உள்ளனர். ஜிஎஸ்டி வரியினால் பட்டு சேலையாக அல்லது நூல் சேலையாக, கைலி, ஜமுக்காளம், துண்டு போன்ற துணிகளாக விற்பனைக்கு வரும் போது கடுமையான விலை உயர்வு ஏற்படுகிறது.

இதனால் மில் துணிகள், விசைத்தறி துணிகளுக்கு ஈடாக கைத்தறி துணிகள் போட்டி போட முடியாமல் கைத்தறி துணிகளின் விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நெசவாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து, வருமானம் ஈட்டமுடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு,  கைத்தறி துணிகளுக்கு முழுமையாக ஜிஎஸ்டியை நீக்க வழிவகை செய்ய வேண்டும்.

Related Stories:

>