×

தாம்பரத்தில் பரபரப்பு; ஏலச்சீட்டு நடத்தி ரூ50 லட்சம் மோசடி: தம்பதி தலைமறைவு

தாம்பரம்: தாம்பரத்தில் ஏலச்சீட்டு நடத்தி, ரூ50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த தம்பதி தலைமறைவாகினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (54). மனைவி துளசி (48). இவர், அதே பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் ஏலச்சீட்டு கட்டி வந்துள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ரூ1 லட்சம் வரையிலான பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக ஏலச்சீட்டு நடத்துவதை துளசி நிறுத்தியுள்ளார்.

இதனால் பணம் கட்டியவர்கள், திருப்பி கேட்டுள்ளனர். அப்போது, ‘எனது வீட்டை விற்று பணம் தருகிறேன்’ என்று துளசி உறுதியளித்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கணவருடன் துளசி மாயமானார். இதை அறிந்து ஏலச்சீட்டுக்கு பணம் கட்டியவர்கள், துளசியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். வீடு பூட்டியிருந்ததால், அதற்குமேல் மற்றொரு பூட்டு போட்டு பூட்டினர். இந்நிலையில், அந்த வீட்டுக்கு நேற்று ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவரின் மனைவி அன்னபாக்கியம் வந்தார். வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க முயன்றுள்ளார். இதை அறிந்த மக்கள் ஒன்று திரண்டனர்.

அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் தாம்பரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், ஜெய்சங்கர், துளசி ஆகியோருக்கு ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் செல்வராஜ், அவரது மனைவி அன்னபாக்கியம் ஆகியோர் அடைக்கலம் கொடுத்திருப்பது தெரந்தது. அதனால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ஜெய்சங்கர், துளசி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், துளசியின் வங்கி கணக்கை போலீசார் முடக்கினர். அவரது வங்கி கணக்கில் ரூ15 லட்சம் இருப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Tampa , Stir in copper; Rs 50 lakh fraud by lottery: Couple goes missing
× RELATED போக்சோ வழக்கில் தீர்ப்பு அளித்ததை...