×

100 நாளில் அனைத்து சாதியினரும் .. அர்ச்சகர் ஆன்மீக மக்களின் பொற்காலம் திமுக ஆட்சி : அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருப்பூர்:திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள விஸ்வேசுவரசுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் உள்ள கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் தொய்வு அடைந்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்து குடமுழுக்கு பணிகள் விரைவுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களின் குறைகளை கேட்டு தீர்வு காணவும், கோயில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாதவர்கள், ஆக்கிரமிப்பு குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோயில்களை தூய்மை நிறைந்த இடமாக மாற்றி, தேர்கள் மற்றும் தெப்பக்குளங்களை சரிசெய்ய ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளனர். அனைத்து கோயில்களிலும் ஒருகால பூஜையாவது நடக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு ஆன்மீக மக்களின் பொற்காலமாக இருக்கும். தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களை விட வசதியுள்ளவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பை முதலில் கைப்பற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணி சிறிய கோயில் முதல் படிப்படியாக நடந்து வருகிறது. அவை 100 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு  சேகர்பாபு கூறினார்.

Tags : DMK ,Minister ,Sekarbabu , சேகர்பாபு
× RELATED 3 ஆண்டுகளை நிறைவு செய்த திமுக அரசு:...