×

திருச்சூர் கொள்ளை பாணியில் பாஜ தேர்தல் செலவுக்கு கொண்டு வந்த ரூ4.40 கோடி சேலத்திலும் கொள்ளை: கேரள போலீசார் பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் அருகே பாஜ தேர்தல் செலவுக்காக கொண்டு வரப்பட்ட ரூ.3.5 கோடி கொள்ளையடித்த கும்பல், சேலத்தில் வைத்து அதே பாணியில் ரூ.4.40 கோடி கொள்ளையடித்த தகவல் தற்போது அம்பலமாகி உள்ளது. கேரளாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு மறுநாள் பாஜவை சேர்ந்த தர்மராஜன் என்பவர் திருச்சூர், கொடகரை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய டிரைவர் சம்ஜீர்விடம் ரூ.25லட்சம் பணத்தை காரில் கொடுத்து அனுப்பினேன்.

அதை ஒரு கும்பல் வழியில் விபத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்து சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஆனால் உண்மையில் அந்த சம்பவம் ஏப்ரல் 3ம் தேதியே நடந்துள்ளது. காரில் கொண்டு வரப்பட்டது ரூ.25லட்சம் அல்ல என்றும் ரூ.3.5 கோடி எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
அது பாஜக.வின் தேர்தல் செலவுக்கு கொண்டு வரப்பட்ட பணமாகும். அந்த பணத்தை கொள்ளையடித்ததும் பாஜவினர் தான் என தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஒரு பெண் உள்பட 22 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1.49 கோடி மற்றும் நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த கொள்ளை பணத்தில் தான் நகைகளை வாங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜ மாநில தலைவர் சுரேந்திரனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் இந்த வழக்கு குறித்து போலீசார் திருச்சூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில் கூறியிருப்பதாவது; திருச்சூர் அருகே கொடகரையில் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.3.5 கோடி பணத்தை கடத்தி கொண்டு வந்தது குறித்தும், கொள்ளை அடிக்கப்பட்டது குறித்தும் பாஜ மாநில தலைவர் சுரேந்திரன் மற்றும் அமைப்பு செயலாளர் கணேசன், திருச்சூர் அலுவலக செயலாளர் கிரீசன் ஆகியோருக்கு நன்றாக தெரியும் என கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர். பாஜ தலைவர்களுக்கு தெரிந்து தான் கேரளாவுக்கு பணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை தர்மராஜன் மட்டுமே கேரளாவுக்கு ரூ.43.5 கோடி பணத்தை கடத்தியுள்ளார்.

சம்பவத்தன்று ரூ.9.75 கோடி பணம் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது. கோழிக்கோடு வழியாக கொண்டு வரப்பட்ட இந்த பணத்தில் ரூ.6.25 கோடி திருச்சூரில் உள்ள பாஜ தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டது. மீதியுள்ள ரூ.3.5 கோடி பணத்துடன் ஆலப்புழாவுக்கு செல்லும் வழியில் தான் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூரில் இருந்து சேலம் வழியாக ரூ.4.40 கோடி பணம் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது.

வரும் வழியில் சேலத்தில் வைத்து மார்ச் 6ம் தேதி இதே பாணியில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பே இந்த சம்பவம் நடந்துள்ள போதிலும், தேர்தல் முடிந்த மறுநாள் தான் புகார் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பே புகார் செய்தால் சிக்கலாகி விடும் என்றுதான் இவ்வாறு செய்துள்ளனர். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரில் ரகசிய அறை
பாஜவினர் தேர்தல் செலவுக்காக பணத்தை ெகாண்டு செல்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கார் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். அந்த காரில் இருக்கைக்கு அடியில் ஒரு ரகசிய அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரகசிய அறையில் வைத்து தான் பணத்தை கடத்தியுள்ளனர். இந்த அறை எளிதில் யார் கண்ணுக்கும் தெரியாது. சுவிட்ச் போட்டால் மட்டுமே அந்த அறை திறக்கும். இதற்காக ரூ.3 லட்சம் செலவு செய்துள்ளனர் எனவும் குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Thrissur ,BJP ,Kerala , Rs 4.40 crore looted in Thrissur for BJP election expenses: Kerala police
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!