×

துப்பாக்கி சுடுதலில் சீன வீராங்கனை யான் கியான் அசத்தல்; டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனாவுக்கு முதல் தங்கம்: வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் டோக்கியோவில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு நடந்தது.

இதில், இந்தியா சார்பில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும். இதில் இளவேனில் முதல் 6 சீரிஸில் முறையே 104.3, 104.0, 106.0, 104.2, 103.5, 104.5 என புள்ளிகள் பெற்றார். மொத்தம் 626.6 புள்ளிகள் பெற்று 16ம் இடத்தையே பிடித்தார். முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இளவேனில் இழந்தார்.

நார்வே வீராங்கனை ஜீனேட் ஹெக் டியூஸ்டாட் 632.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். கொரிய வீராங்கனை 631.7 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று காலை நடந்தது. இதில், இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி, சீன தைபேயின் சியா-என் லின்/சீ-சுன் டாங் ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி 35-36, 38-38, 40- 35, 37- 36 என புள்ளிகளை பெற்று 5-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

காலியிறுதியில் தென்கொரிய அணியை இவர்கள் எதிர்கொள்கின்றனர். துடுப்பு படகு ஆடவர் இரட்டையர் தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் அரவிந்த் லால், அர்ஜுன் சிங் தோல்வி அடைந்துள்ளனர். ஆடவர் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் அரவிந்த் லால், அர்ஜுன் சிங் 5-வது இடம் பிடித்து தோல்வியடைந்துள்ளனர். தோல்வியடைந்த போதிலும் ரெப்பசேஜ் என்னும் மறுவாய்ப்பு சுற்றில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க சற்று வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கத்தை வென்றுள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இறுதி சுற்றில், சீனாவின் யான் கியான் 251.8 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளியும், சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

Tags : Yan Qian ,China ,Tokyo Olympics ,Indian , Chinese wrestler Yan Qian stuns in sniper; China wins first gold at Tokyo Olympics: Indian team qualifies for quarterfinals in archery mixed doubles
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...