உங்கள் தொகுதியில் முதல்வர் மனு மீது பட்டா வழங்க டிஆர்ஓ புலதணிக்கை ஆய்வு

சின்னசேலம் :  வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்டது அம்மாபேட்டை காலனி. இந்த பகுதியில் சுமார் 100 நபர்களுக்கு கடந்த 1974ல் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வீட்டு மனைப்பட்டா வழங்கினர். ஆனால் கணக்கை திருத்தம் செய்து தனிப்பட்டா வழங்கவில்லை. இதனால் தனிப்பட்டா இல்லாமல் கடன் வசதி பெறுவது, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது உள்ளிட்ட எந்த அரசு நலத்திட்ட உதவிகளும் பெற முடியவில்லை. இதையடுத்து அம்மாபேட்டையை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு தனிப்பட்டா கேட்டு உளுந்தூர்பேட்டையில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் மனு கொடுத்தனர்.

இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கலெக்டர் ஸ்ரீதர் மேற்பார்வையில் அந்த மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து தனிப்பட்டா வழங்குவதற்கான கோப்புகளை ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமையில் தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு வீடு வீடாக சென்று புலதணிக்கை ஆய்வு செய்தார். பின்னர் வீட்டுகாரர்களிடம் பட்டா கேட்பதற்கான அவசியம் என்ன என்பதை கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் பட்டா வாங்கி முறையாக பயன்படுத்துங்கள் என்றும் அறிவுரை வழங்கினார். அப்போது மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சாந்தி, ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் பன்னீர்செல்வம், தனி வட்டாட்சியர் குமரன், மாவட்ட வருவாய் அலுவரின் நேர்முக உதவியாளர் கமலக்கண்ணன், நில அளவையர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் பத்மா, விஏஓ கவுசல்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: