குருந்தன்கோடு சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு

நாகர்கோவில் :  குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் சார்பில், குருந்தன்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதித்திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவப் பிரிவுக்கு, புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை, நேற்று துறைமுக நிறுவன தலைவர் சுனில் பாலிவால் திறந்து வைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடத்தில் மருத்துவர் அறை, மருந்தகம், மருந்து கிடங்கு, சிகிச்சை அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கு செயல்பட இருக்கும் சித்தா பிரிவில் வர்ம மருத்துவம், யோகா பயிற்சிகள், உடல் எடை குறைத்தல், நீராவி பிடித்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மூட்டுவலி போன்றவற்றிற்கு கதிர்வீச்சு வாயிலாக ஒத்தடம் சிகிச்சை மற்றும் காய்ச்சல், தலைவலி, மூலம், மாதவிடாய் பிரச்னைகள் போன்ற நோய்களுக்கு உள் மருந்துகளான கசாயம், சூரணம், லேகியம் மற்றும் தைலம் போன்ற மருந்துகள் வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து, இரவிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட, இரவிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், காமராஜர் துறைமுக நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதித்திட்டத்தின் கீழ் a26 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட  புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தையும், சுனில் பாலிவால் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், திட்ட இயக்குநர் (பொ) மைக்கேல் அந்தோணி பெர்ணாண்டோ, இந்தியாவின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) வக்கீல் விக்டோரியா கவுரி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மேபல் அருள்மணி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் எஸ்.அனுஷா தேவி (குருந்தன்கோடு), எஸ்.அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரா ஓய்சிபாய் (குருந்தன்கோடு), தேவி (இரவிபுதூர்) உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories:

>