×

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நலனுக்காக அனைத்து நூலகத்தையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி...!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகத்தையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நூலகங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே 10ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழகத்தில் நோய்தொற்று படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி அரசு அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்படுத்த ஆணையிடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் பொதுமக்களுக்கு சேவையாற்றி வரும் நிலையில் வாசகர்கள், பொதுமக்கள் மூலமாக தமிழகத்தில் செயல்படும் அனைத்து நூலகங்களிலும் செயல்படுத்த கோரி பல்வேறு விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் வந்துள்ளன.

அத்துடன் போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நோய்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பொது நூலகத்துறை கீழ் செயல்படும் நூலகங்களை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் செயல்படும் நூலகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : T.N. Government , Government of Tamil Nadu has given permission to open all libraries from today for the benefit of students preparing for competitive examinations ...!
× RELATED தமிழகத்தில் புலம்பெயர்...