கள்ளக்குறிச்சியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ‘என்னுடன் சரிக்கு சரியாக நின்று பதில் கூற தகுதியில்லை...’...ஒன்றிய செயலாளருடன் முன்னாள் அமைச்சர் மோதல்

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியில் முகையூர் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மதியம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு வழிகாட்டு குழு உறுப்பினருமான மோகன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பழனிசாமி வரவேற்றார்.  கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மோகன் பேசுகையில், ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் முகையூர் ஒன்றியத்தில் அதிமுகவினர் சரியாக வேலை செய்யவில்லை. இங்குள்ள ஒன்றிய செயலாளர் பழனிசாமி யாருடைய ஆதரவின்பேரில் பதவிக்கு வந்தார் என்பதுகூட எனக்கு தெரியும் என பேசினார்.

உடனே, மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் பழனிசாமி, ‘நான் கடந்த பல வருடங்களாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து போஸ்டர் ஒட்டிதான் இந்த பதவியை அடைந்ததாகவும், யாருடைய பரிந்துரையின் பேரிலும் ஒன்றிய செயலாளராக ஆகவில்லை’ என்று கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் மோகன், ‘‘நீ எப்படிப்பட்டவன் என்பதை மிக நன்றாக நான் அறிவேன், உன்னை பற்றி இந்த ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். என்னுடன் சரிக்கு சரியாக நின்று பதில் கூற தகுதியில்லை’’ என்று ஆவேசமாக பதில் கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் மேடையில் முன்னாள் அமைச்சரும் ஒன்றிய செயலாளரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் உடனே குறுக்கிட்ட மாவட்ட செயலாளர் குமரகுரு இருவரையும் சமாதானம் செய்து வைத்து செயல் வீரர்கள் கூட்டத்தை நிறைவு செய்தனர்.

Related Stories:

>