நீதிமன்றத்தை அவதூறாக விமர்சித்த வழக்கு திருமயம் கோர்ட்டில் எச்.ராஜா ஆஜர்

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் கடந்த 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது போலீசார், அந்த பகுதியில் உயர்நீதிமன்றம் உத்தரவுபடி ஊர்வலம் செல்ல கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர்நீதிமன்றத்தையும் மற்றும் காவல்துறையையும் அவதூறாக பேசினார். இதுதொடர்பாக 8 பிரிவுகளின்கீழ் எச்.ராஜா உள்ளிட்ட 20 பேர் மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி த.பெ.தி.க. வழக்கறிஞர் துரைசாமி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து திருமயம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில், நீதிமன்றத்தை விமர்சித்த வழக்கில் எச்.ராஜா, திருமயம் நீதிமன்றத்தில் 23ம்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்  கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா) ஆஜரானார். மேலும் அவருடன் இந்த வழக்கில் 4-வது குற்றவாளியாக எச்.ராஜாவின் மருமகன் சூரியநாராயணன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராகாந்தி, அடுத்தக்கட்ட விசாரணையை வரும் செப்.17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories:

>