ராய்காட் உட்பட 10 இடங்களில் நிலச்சரிவு மகாராஷ்டிராவில் மழைக்கு 136 பேர் பலி: 25க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

மும்பை: மகாராஷ்டிராவில் கனமழையால் 2 நாட்களில் நிலச்சரிவு ஏற்பட்டும், வீடுகள் இடிந்தும் 136 பேர் இறந்தனர்.  மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதித்துள்ளனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சாலை போக்குவரத்து, ரயில் சேவை முடங்கியுள்ளது. ராய்காட், ரத்னகிரி மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ராய்காட் மாவட்டம், மகாட் தாலுகாவில் உள்ள தலாய் கிராமம் அருகே நிலச் சரிவு ஏற்பட்டதில் வீடுகள் புதைந்தன. இதில், நேற்று மாலை வரை 43 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

 ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் நகரில் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு குறைந்தப்பட்சம் 10 பேராவது இடிபாடுகளிலும், நிலச் சரிவிலும் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோலாப்பூர் மாவட்டம் பஞ்கங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 47 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு ஏராளமானோர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். சதாரா மாவட்டத்தில் மண் சரிவு, மழை காரணமாக 6 பேர் இறந்துள்ளனர். இதே மாவட்டத்தில் படான் தாலுகாவில் உள்ள கிராமத்தில் 8 வீடுகள் மண்சரிவில் புதைந்தன.  

இந்த மழை விபத்துகளில் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட விபத்துகள் நடந்து, கடந்த 2 நாட்களில் மொத்தம் 136 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 25 பேரை காணவில்லை. மும்பையில் பெரிய அளவில் மழை இல்லாவிட்டாலும், சில இடங்களில் வீடு, சுற்றுச்சுவர்கள்  இடிந்து விழுந்தன. மும்பை கோவண்டி  சிவாஜி நகரில், மும்பை சிட்டி மருத்துவமனை அருகே வீடு இடிந்து 4 பேர் இறந்தனர்.

Related Stories:

More
>