அரசு படைக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்: ரகசியத்தை சொல்ல பென்டகன் மறுப்பு

வாஷிங்டன்:  ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கு ஆதரவாக, தலிபான்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க, நேட்டோ படை வீரர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இதனால், ஆப்கான் அரசு படைகளை தலிபான்கள் எளிதாக வீழ்த்தி, நாட்டின் பெரும் பகுதிகளை கைப்பற்றி விட்டனர். நாட்டின் எல்லை பகுதிகளில் 90 சதவீதம் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தலிபான்கள் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில், அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க விமானப்படை களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின்  ஊடக செயலாளர் ஜான் கிர்பி நேற்று கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானின் அரசு படைகளுக்கு ஆதரவாக, தலிபான்கள் மீது வான்வழி தாக்குதலை அமெரிக்க விமானப்படை நடத்தி வருகிறது. ஆனால், இந்த தாக்குதல் தொடர்பான முழு விவரங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாது.  ஆப்கான் அரசு படைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்துவோம். கடந்த 30 நாட்களில் 6 அல்லது 7 முறை தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான தாக்குதல்கள் டிரோன் மூலம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்டர் ஜெனரல் கென்னத் மெக்கென்சி, தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவை அமெரிக்க வீரர்களுக்கு வழங்கி இருக்கிறார்,” என்றார்.

அதிபர் விலகாத வரை அமைதி கிடையாது

தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுகைல் ஷாகீன் நேற்று கூறுகையில், ‘‘ஆட்சி அதிகாரத்தை ஏகபோக உரிமையாக்குவதில் தலிபான்களுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த காலங்களில் ஏகபோக அதிகாரத்தை கொண்டு வருவதற்கு முயன்ற எந்த அரசும் வெற்றி பெறவில்லை. அதிபராக அஸ்ரப் கனி இருக்கும் வரையிலும், புதிய அரசு அமையாத வரையிலும் ஆப்கானில் அமைதி நிலவாது. அதிபர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

>