×

நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி ஜம்முவில் குண்டுடன் நுழைந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது: உபகரணங்களில் சீனா முத்திரை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கர வெடிமருந்துகளுடன் பாகிஸ்தானில் இருந்து நள்ளிரவில் ஊடுருவிய டிரோனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இதன் மூலம், டிரோன் மூலம் நடத்தப்பட இருந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது. ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தின் மீது கடந்த மாதம் 27ம் தேதி டிரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில். 2 வீரர்கள் காயமடைந்தனர். இந்தியாவில் முதல் முறையாக தீவிரவாதிகள் நடத்திய இந்த டிரோன் தாக்குதல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பாகிஸ்தான் ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

இதனால், ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு முக்கிய ராணுவ தளங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. டிரோன்களின் ஊடுருவலை கண்டுபிடித்து தாக்குதல் நடத்துவதற்கான கருவிகளை பொருத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,  இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தில்  சம்பாவில் பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லை வழியாக நேற்று நள்ளிரவு டிரோன் ஒன்று பறந்து வருவதை போலீசார் கண்டனர். இந்திய எல்லைக்குள் 8 கி.மீ. தூரத்துக்கு ஊடுருவிய அந்த டிரோனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். அந்த டிரோன் சுமந்து வந்த 5 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இதன்மூலம், பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.  இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூடுதல் ஐஜி முகேஷ் சிங் கூறுகையில், ‘‘நள்ளிரவு ஒரு மணிக்கு டிரோன் கீழே இறங்க முயற்சித்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. பாதி தயார் நிலையில் இந்த வெடிப்பொருட்கள் இருந்தன. வெடிப்பதற்கு ஒயர் இணைப்பு மட்டுமே  தரப்பட வேண்டியிருந்தது. முதல் கட்ட விசாரணையில், இவை சீனா, தைவான், ஹாங்காங் உபரகணங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார். தீவிரவாதிகளுக்கு போடுவதற்காக பாதி தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த டிரோனில் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோப்பூரில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த வீரர்கள், வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சரணடைந்து விடும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், வீரர்கள் மீது தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

80 தீவிரவாதிகள் காலி
ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டில் கடந்த 7 மாதங்களில் மட்டுமே 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Tags : Jammu ,China , Midnight, Attack, Attempt, Jammu, Drone, China trademark
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...