×

பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளை கார்பரேஷனாக மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை:இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 82 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 45 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில், மேற்கண்ட தொழிற்சாலைகளை மத்திய அரசு கார்பரேஷனாக மாற்றி தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்  மத்திய அரசு கடந்த ஜூன் 16ம் தேதி முதல் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை 7 பிரிவுகளாக பிரித்து கார்பரேஷனாக மாற்றி உள்ளனர். இதனால், பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இதனையடுத்து, பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை கார்பரேஷனாக மாற்றியதை கண்டித்தும், வேலை நிறுத்த தடை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று முன்தினம் நாடு முழுவதும் உள்ள 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை அருகே உள்ள ஆவடியில் உள்ள படைத்துறையின் உடை தொழிற்சாலை, ஆவடி, டேங்க் பேக்டரி மற்றும் இன்ஜின் பேக்டரி ஆகிய தொழிற்சாலைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்கண்ட அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவின் சார்பில் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடத்தினர்.

இந்நிலையில், மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், கண்டன கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று நடந்தது. இதற்கு, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் எஸ்.மயில்வாகனன், சி.ஐ.டி.யூ மாநகர பொதுச்செயலாளர் மா.பூபாலன் ஆகியோர் தலைமை வகித்தார். இதில், 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒன்றிய பாஜ அரசு, பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கூட்டத்தில், தொமுச பேரவைத்தலைவர் வே.சுப்புராமன், பொருளாளர் கி.நடராஜன், அகில இந்தியன் வங்கி ஊழியர் சங்கத் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்களின் சம்மேளன பொதுச்செயலாளர் சி.குமார், சி.ஐ.டி.யூ மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், அகில இந்திய எச்.எம்.எஸ் தலைவர் ராஜா தர், மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைவர் ஆவடி அந்திரிதாஸ், தையல் சங்க தலைவர் டி.ராமமூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் . இந்த கொரோனா தொற்று காலத்தில் கூட்டம் கூடியதாக 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Tags : Department of Defense , Department of Defense factories Demonstration condemning the conversion into a corporation
× RELATED சிஏஏ சட்டம் இந்தியாவின் உள்விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி