×

வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரி இழப்பீடு தொகையை ஒன்றிய அரசிடம் இருந்து விரைந்து பெற நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரி இழப்பீடு தொகையை ஒன்றிய அரசிடம் இருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  வணிகவரி மற்றும்  பதிவுத்துறை  அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி,  வணிகவரி ஆணையர் சித்திக், பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் அடைந்திட முனைப்புடன் செயல்பட வேண்டும். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரி இழப்பீடு தொகையினை ஒன்றிய அரசிடம் இருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வணிகவரி மற்றும் பதிவுத்துறை குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வாயிலாக பெறப்படும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் எவ்வித தொய்வுமின்றி தீர்வு காணப்பட வேண்டும்.பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்த வரி வருவாயானது அத்தியாவசியமனது என்பதால், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரியினை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வணிகர் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் உறுப்பினராகி அதன் சேவைகளை பெறுவதற்கு துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பதிவுத்துறையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ள ஆவண தொகுதிகளை கணினியில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.  இந்த பணிகள் முடிவடைந்த பின்பு பொதுமக்கள் இணைய வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை பெறுவதற்கு வழிவகை செய்யப்படுவதோடு, பட்டா மாறுதல் செய்யும்போது தொடர்புடைய ஆவணங்களை வருவாய் துறையினர் இணைய வழியாக பார்வையிடவும் இயலும். பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும்  அமைய வேண்டும். வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அதிகாாிகள் ஆலோசணை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வரி ஏய்ப்பு
நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”



Tags : United States Government ,Commercial Taxes and Registration Department ,Chief Minister ,MK Stalin , Study on the functions of the business tax and registry Amount of GST tax compensation outstanding Action to get rid of the Union Government quickly: Chief Minister MK Stalin's request
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...