×

10 வருடத்திற்கான ரவுடிகள் பட்டியல் சேகரிப்பு மாமூல் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகரில் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு முன்னிட்டு ‘பாதுகாப்பான நகரத் திட்டங்கள்’ அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கம் பொருட்டு ‘நிர்பயா பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம்’ தொடங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள தரைத்தளத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் ‘பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம்’ நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அப்போது சமூக நலத்துறை முதன்மை செயலாளர் ஷம்புகலோலிகர், சமூக நலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் ரத்னா கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:பெண்கள் உதவி மையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தொண்டு நிறுவனங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த மையத்திற்கு வந்தால் அவர்களுக்கு, ஆலோசனை வழங்க பெண்களுக்கு தனி ஆலோசகர், குழந்தைகளுக்கு தனி ஆலோசகர், சட்ட ஆலோசகர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த மையம் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முக்கியமாக  வரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, போக்சோ, பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதற்கேற்ப ஆலோசனை வழங்கப்படும். தமிழகத்தில் 34 இடங்களில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் எழும்பூர், தாம்பரத்தில் ெதாடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாகவே பெண்கள் மற்றும் குழந்தைகள் முன் வந்து புகார் கொடுத்து வருகின்றனர்.

ெசன்னை மாநகரில் ‘Direct action against rowdy elements’ என்ற ஆப்ரேஷன் தொடங்கி உள்ளோம். முதற்கட்டமாக கடந்த 10 வருடத்திற்கான ரவுடிகளின் விவரங்களை சேகரித்துள்ளோம். அவர்களின் தற்போதைய செயல்பாடுகளை வைத்து ஏ மற்றும் ஏ பிளஸ் என இரு பிரிவுகளாக பிரித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் மற்றும் கடைகள், வணிக வளாகங்களில் மாமூல் வாங்கும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் குற்றம் செய்து விட்டு வெளி மாநிலங்களில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளிலும், பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மாநகர காவல் துறை சார்பில் ஜாமீன் ரத்து செய்ய நீதிமன்றத்தில் பரிந்துரை செய்ய உள்ளோம். சென்னையில் பல்வேறு முக்கிய வழக்குகளில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த 39 ரவுடிகள் காவல் நிலையங்களில் கையெழுத்திடாமல் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட உள்ளது. தேனாம்பேட்டை தொழிலதிபரை கடத்திய வழக்கில் சிபிசிஐடி போலீசார் அளிக்கக்கூடிய அறிக்கையை பொறுத்து சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.



Tags : Commissioner ,Shankar Jiwal , Rowdies list collection for 10 years Strict action will be taken if normal collection is made: Police Commissioner Shankar Jiwal warns
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...