நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி: போலீசார் உயிருடன் மீட்டனர்

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள், சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் கூவம் ஆற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை மீட்க முயன்றனர். ஆனால் வாலிபர் ஆற்றில் உள்ள சேற்றில் சிக்கியதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் உதவி ஆய்வாளர் திலகவதி மற்றும் காவலர் சக்தி முருகன் ஆகியோர் கயிற்றின் உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு வாலிபரை உயிருடன் மீட்டனர்.

அதைதொடர்ந்து மீட்கப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராயபுரம் தம்புலேன் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (31) என்றும், இவர் வயிற்றில் உள்ள பெரிய கட்டியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் கடுமையான வயிற்றி வலி தங்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்து கூவம் ஆற்றில் குதித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>