×

அடுத்தாண்டு குஜராத்தில் பேரவை தேர்தல்; மோடி, அமித் ஷா கோட்டையில் நுழைந்த மம்தா: போஸ்டர்கள் கிழிப்பால் பரபரப்பு

அகமதாபாத்: மோடி, அமித் ஷாவின் கோட்டையாக விளங்கும் குஜராத்தில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநில நிர்வாகிகளுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மேற்குவங்க முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மேற்குவங்கம் மற்றுமின்றி உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், வடகிழக்கு மாநில கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் உரையாற்றினார்.

அப்போது, ‘மேற்குவங்க அரசியலை தாண்டி, மற்ற மாநிலங்களிலும் திரிணாமுல் கட்சி வெற்றி பெறவேண்டும். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் அக்கட்சியை தோற்கடிக்க வேண்டும்’ என்றார். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அகமதாபாத்தில் மம்தா பானர்ஜியின் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆங்காங்கே மம்தா பானர்ஜியின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தன. அவை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டன. குறிப்பாக அகமதாபாத்தில் உள்ள கீதா மந்திர் பஸ் ஸ்டாண்டில் திரிணாமுல் கட்சியின் போஸ்டர் கிழிக்கப்பட்டன.

இதனால், திரிணாமுல் - பாஜக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து, குஜராத் மாநில திரிணாமுல் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஜிதேந்திர கடயாதா கூறுகையில், ‘மேற்குவங்க அரசியலில் மூன்று மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். அங்கு மம்தா பானர்ஜி பெரிய வெற்றியைப் பெற்றதுபோல், இங்கேயும் வெற்றி பெறுவோம். குஜராத் அரசியலில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. அவர்களுக்கு மாற்றாக திரிணாமுல் வெற்றி பெறும்’ என்றார்.

குஜராத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குஜராத் சென்று வந்தார். தற்போது திரிணாமுல் காங்கிரசும் குஜராத்தில் கால்பதிக்க வியூகங்களை வகுத்துவருவதால், அடுத்தாண்டு பேரவை தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கோட்டையில் புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளன.

மோடி - மம்தா சந்திப்பு
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் 28ம் தேதி கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு செல்கிறார். அப்போது அவர் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார். மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிடும் மம்தா, தியாகிகள் தின நிகழ்வில் தனது உரையின் போது, ​​ஜூலை 27, 28 மற்றும் 29ம் தேதிகளில் தான் டெல்லியில் இருப்பேன் என்று கூறினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ​​மேற்குவங்க பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பின், முதன்முதலாக மம்தா பானர்ஜி டெல்லி செல்ல உள்ளதால், அவரது பயணம் அரசியல் ரீதியாக  முக்கியத்துவம் பெறுகிறது.

Tags : Election of the Council ,Gujarat ,Modi ,Amit Shah , Assembly elections in Gujarat next year; Mamata enters Modi, Amit Shah fort: Posters riot
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...