கடலூரில் நிற்காமல் செல்லும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்கள்: பயணிகள் அவதி

கடலூர்: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலூரில் நிற்காமல் செல்வதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் வழியாக வாரணாசி, மும்பை, புவனேஷ்வர், ஜோத்பூர், அயோத்தி, திருப்பதி போன்ற வெளிமாநில நகரங்களுக்கு வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்னை, ராமேஸ்வரம், திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால், திருச்செந்தூர் போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்று வருகின்றன. விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதை இருந்தபோது, இந்த தடத்தில் நிறைய எஸ்பிரஸ் ரயில்களும், பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டன.

அதேபோன்று சேலம்- கடலூர் இடையே மீட்டர் கேஜ் ரயில்பாதை இருந்தபோது தினசரி பயணிகள் ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சேலம்- கடலூர் மற்றும் விழுப்புரம்- மயிலாடுதுறை மீட்டர்கேஜ் பாதைகள் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. இவ்விரு பாதைகளும் மீட்டர்கேஜ் பாதைகளாக இருந்தபோது கடலூர் நகருக்கு கிடைத்த ரயில் போக்குவரத்து வசதிகள் அகலபாதையாக மாற்றப்பட்ட பின்னர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடலூர்- சேலம் மீட்டர்கேஜ் ரயில்பாதையில் கடலூர்- சேலம் இடையே ஒரு நாளைக்கு 3 முறை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

அதேபோன்று கடலூர்- விருத்தாசலம், கடலூர்- விருத்தாசலம்- திருச்சி மற்றும் பெங்களூருக்கு பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டன. இப்பாதை அகலப்பாதையாக மாறிய பின்னர் கடலூர்- சேலம் பயணிகள் ரயில் விருத்தாசலத்துடன் நிறுத்தப்பட்டது. அதேபோன்று விழுப்புரம்- மயிலாடுதுறை மீட்டர்கேஜ் பாதையில் முக்கிய ரயில் நிலையங்களாக கடலூர் துறைமுகம் சந்திப்பு மற்றும் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையங்கள் திகழ்ந்தன. பகல், இரவு என நாள்தோறும் எண்ணற்ற ரயில் சேவைகளை கடலூர் பகுதி மக்கள் பெற்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் முதலில் ஒரு சில ரயில்களே இயக்கப்பட்டன.

பின்னர் ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் கடலூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காமல் சென்றன. இதையடுத்து தொடர்ச்சியான கோரிக்கைகள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக காலை நேரத்தில் சென்னை செல்லும் செந்தூர் விரைவு ரயிலை திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அதிரடியாக மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரயிலாக கடலூர் துறைமுகம், திருப்பாதிரிபுலியூர் நிலையங்களில் நிற்க ஆரம்பித்தன. குறிப்பாக காரைக்கால் - சென்னை, திருச்சி- சென்னை, ராமேஸ்வரம்- திருப்பதி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டு இடங்களிலும் நின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பத்தும் பொருட்டு நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு தற்போது எக்ஸ்பிரஸ் ரயில் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் வழியாக சென்று வந்த தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இவ்வழியாக செல்லும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்திலும் கடலூர் துறைமுகம் மற்றும் திருப்பாதிரிபுலியூர் நிறுத்தங்கள் எந்தவித அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரத்தில் சென்னை செல்ல ஒரு ரயில் கூட இல்லை.

நாகர்கோவில்- தாம்பரம் இடையேயான அந்தோதையா விரைவு ரயில் மட்டும் திருப்பாதிரிபுலியூரில் நின்று செல்கிறது. இதனால் கடலூரை சேர்ந்த ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடலூர் துறைமுகம் சந்திப்பு- விருத்தாசலம் மார்க்கத்தில் காரைக்கால்- பெங்களூர் விரைவு பயணிகள் ரயில், திருப்பாதிரிபுலியூர்- திருச்சி பயணிகள் ரயில் சென்று வந்த நிலையில் அவை இயக்கப்படவில்லை. இருப்பினும் சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரையிலான பயணிகள் ரயில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது.

இதனால் கடலூர் நகர மக்களுக்கு 2 ரயில் நிலையங்கள் இருந்தும், ரயில் சேவை என்பது எட்டாக்கனியாக உள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் கடலூரில் ஏற்கனவே நின்று சென்ற இடங்களில் மீண்டும் ரயில்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் நிலைய பெயரால் குழப்பம்

திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் கடலூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடமாநிலங்களுக்கு செல்லும் மும்பை, புவனேஷ்வர், ஜோத்பூர், அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பாதிரிபுலியூரில் நின்று செல்கின்றன. இருப்பினும் வெளியூரில் இருந்து வருபவர்கள் ரயில் நிலைய பெயரால் குழப்பம் அடைகின்றனர். கடைசி நேரத்தில் ரயிலில் இருந்து இறங்க முற்படும்போது, ரயிலில் இருந்து கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதுபோன்று இறங்கியபோது ரயிலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எனவே பயணிகள் குழப்பத்தை தவிர்க்க பேருந்துகளில் கடலூர் முதுநகர், கடலூர் புதுநகர் என ஸ்டேஜ் உள்ளது. அதேபோன்று ரயில்வேயிலும் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தின் பெயரை கடலூர் புதுநகர் என மாற்றம் செய்து ரயில் நிலைய பெயர் பலகை வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தொடர்ந்து புறக்கணிப்பு

தெற்கு ரயில்வேயால் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் போது பெரும்பாலும் கடலூரில் நிற்பதில்லை. அதேபோன்று ரயில் நிலையத்திலும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. சிறு சிறு நகரங்களுக்கு கூட பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்போது கடலூரை பொறுத்தவரை திருப்பாதிரிபுலியூர்- திருச்சி இடையே ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டுமே உள்ளது. மேலும், தமிழகத்தின் தொழில் தலைநகரமான கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு தற்போது வரை ரயில் சேவை இல்லை. கடலூர்- புதுச்சேரி- சென்னை இசிஆர் ரயில்பாதை திட்டமும் ஆய்வுப்பணியோடு முடங்கியுள்ளது. புதிய ரயில் திட்டங்கள் என்பது கடலூர் மாவட்ட மக்களுக்கு கானல் நீராகவே உள்ளது.

Related Stories:

>