×

குளிர்கால கொண்டாட்டம்!

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கையில் விதவிதமான அனுபவங்கள் கிடைக்கலாம். அவை மனதளவில் உறுதியையும், தைரியத்தையும் ஏற்படுத்தும். ஆனால் இப்படி ‘பனி மழைகளில்’ நாட்களைக் கடத்த வேண்டுமென்றால், உடல் தெம்பு, மனத்தெம்பு இரண்டுமே வேண்டும். பார்த்தவுடன் பயந்துவிட்டால், சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விடுவோம். இவற்றையும் சாதனையாக நினைத்து எதிர்கொண்டால்தான், பலவித புதிய அனுபவங்களைப் பெற முடியும். எத்தனைதான் பார்த்திருந்தாலும், கேட்டிருந்தாலும் நாமே அதை அனுபவிக்கும் சுகமே தனிதான்.

பொதுவாக வெளிநாடுகளில் குளிர்காலங்களில் ஏரிகள் அனைத்தும் உறைந்து விட்டதாக செய்திகளில் படித்து இருப்போம். ஒரு பெரிய ஏரி எப்படி உறைந்து ‘ஐஸ்’ ஆகும்? இதெல்லாம் சாத்தியமில்லை. ஒரு வேளை அதன் கரையோரங்கள் உறைந்திருக்கலாம் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் ஏரிமேல் நடப்பது போலவும், ஐஸ்கட்டிகளுடன் நிற்பது போன்ற புகைப்படங்களை பார்த்த பிறகும் என்னால் அதை நம்ப முடியவில்லை.

ஆனால் ‘மினியாபோலிஸ்’ சென்ற போது ஒரு ஏரி என்ன, அங்குள்ள அனைத்து  ஏரிகளும் உறைந்து கிடப்பதை கண் எதிரே கண்ட போது தான் அது என்னை மேலும் வியப்பூட்டியது. அதிலும் ‘மினியாபோலிஸ்’ ஏரிகள் நகரம் என்றே அழைக்கப்படுவதுண்டு. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் இங்கு உள்ளது. பிரபலமான ஏரிகள் அங்கு பல உள்ளன.

கோடையில் ஏரிக்கரையோரமாக நடக்கும் போது, அங்கு ஏரியின் நடைபாதைகளில், பச்சைக்கம்பளம் விரித்தாற்போன்ற புல்தரையின் ஓரங்களில் செழித்து நிற்கும் மரங்களையும் பார்த்துக்கொண்டும், செடி, மரங்களிலிருந்து கொட்டிக்கிடக்கும் பூக்களை மிதிக்காமல் அடி வைத்துக்கொண்டும் இருட்டும் வரை நடக்கும் போது ஏற்படும் சுகம் அலாதி.

குளிர் காலத்தில் நான்கு மணிக்கெல்லாம் இருட்டி விடும். ஆனால், கோடையில் இரவு ஒன்பது மணிக்குக்கூட சூரியனைப் பார்க்கலாம். நிறைய வீடுகளில் இங்கு படகு வைத்திருக்கிறார்கள். கோடையில் தங்கள் கார்களில் படகை பிரித்து தனித்தனியாக வைத்துக்கொண்டு, ஏரியில் ஒன்று சேர்த்து படகு சவாரி செய்வார்கள். அத்தகைய ஏரிகள் இந்தக் குளிரில் உறைபனியாகக் காட்சி தருகின்றன. குளிர் காலத்தில் படகு சவாரிக்குப் பதில், ஏரியின் உறைபனியில் நடப்பது இப்பொழுது பயிற்சியாகி விட்டது.

அந்த அனுபவம் இன்றும் ஒரு கனவுபோல்தான் தோன்றுகிறது. அந்த கனவை நினைவாக்கியது ‘லூமினரி லப்பட்’ (Luminory Loppet) திருவிழா. தீவுகளிடையே அமைந்துள்ள பெரிய ஏரி. தலை முதல் கால் வரை கொஞ்சம் அதிகமாகவே துணிகள் அணிய வேண்டும். நம் உடல் எடை ஒரு பங்கு என்றால், உடையின் எடை ஒரு பங்கு ஆகிவிடும். உடையைச் சுமந்து செல்வதே ஒரு பாரம்தான். இருந்தாலும் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்தோம். ‘பார்க்’ செய்வதற்கு இடமில்லாமல், அப்படி ஒரு நெருக்கடி. அவ்வளவு கார்கள்.

இரவின் இருளில் உறைந்த பனிமேல் நடக்க இப்படி ஒரு கூட்டமா என்ற வியப்பு ஆழ்த்தியது. ஒரு வழியாக வண்டியை நிறுத்தினாலும், அதில் இருந்து இறங்குவது மற்றொரு டாஸ்காக இருந்தது. ஏனெனில் கார் கதவைத் திறந்தவுடன் முட்டி அளவு ‘ஐஸில்’தான் கால் வைக்க வேண்டும். நானும் என் கணவரும் மெதுவாக ‘அரிசி மாவு’ போன்ற பனிக்குள் காலை வைத்து நடந்தோம். முதலில் இரண்டு மூன்று அடி வைக்க பயமாக இருந்தாலும், சுமார் அரை மைல் நடந்து ஏரிக்கரையை அடைந்தோம்.

இதுவே ஒரு சாதனையாகத்தான் இருந்தது. ஏரிக்கரையில் ஆள் உயரத்திற்கு ஐஸ் உறைந்திருந்தது. அதன்மேல் மெல்ல ஏறி, ஒருவர் பின் ஒருவராகச் செல்ல வேண்டும். ‘காலடி நிழல்’ என்பார்களே, அதேபோல் ஒருவர் பதித்த காலடிமேல் வைத்து நடந்து சென்று ஏரிக்குள் சென்றோம். அப்பொழுது அது ஏரி என்று ‘சத்தியம்’ செய்தால்கூட நம்ப முடியாது. நம் ‘மெரினா’ கடற்கரையில் மணல் பகுதி எப்படியிருக்குமோ, அப்படித்தான் முழுவதும் பனிக்கட்டிகளால் மூடியிருந்தது.

‘மெரினா’ மணல் பகுதி முழுவதும் முல்லைப்பூவைக் கொட்டி, சிறிதுகூட இடைவெளியில்லாமல், வெள்ளைக் கம்பளமாக்கினால், எப்படி காட்சி  தருமோ, அப்படித்தான் என்றால்கூட சரியாகாது. ஏனெனில், முழங்கால் அளவு பனித்துகள்களில் கால் உள்ளே சென்றுவிடும். மீண்டும் மெதுவாக காலை அங்கிருந்து தூக்கி அடுத்த அடி வைக்க வேண்டும். தனியாகச் சென்றால், அதில் நடப்பது சாத்தியமில்லை என்றாலும் மெல்ல நடக்க ஆரம்பித்தோம்.

‘ஏரி’ என்றதும் ஒரு பத்து அடி தூரம் என்று நினைக்க முடியாது. கண்ணுக் கெட்டியவரை தெரிந்த ‘ஐஸ்’தரை முழுதும் ஏரிதான். சிறு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனிச்சறுக்கல் விளையாட்டும், துடுப்புப் போட்டு ‘ஐஸில்’ ஓடுவதும்தான் இங்கு பிரபல குளிர்கால
விளையாட்டுக்கள். ஏரியின் கரைக்கும், ஏரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. எல்லாம் சம தரையாக காணப்பட்டது. அந்த இரவில் அத்தகைய ஒரு கூட்டத்தைக் கண்டதும் என் நினைவுகள் எங்கோ சென்றன.

சிறு வயதில், கும்பகோணத்தில் நான் சென்ற மகாமகக் காட்சிகள் கண்முன்னே தோன்றின. மகாமகத்திற்கு சுமார் ஒரு மாதம் முன்பே அங்குள்ள குளத்தில் நீர் தெளிய வைக்கப்பட்டிருக்கும். அந்தக் குளத்திலுள்ள கிணறுகளைப் பார்க்க கூட்டம் கூட்டமாக நண்பர்களுடன் செல்வதுண்டு. மகாமக நேரத்தில் ஜனத்தொகை அதிகரிக்கும் என்பதால், சிலர் முன்னதாகவே வந்துவிட்டுச் செல்வார்கள். அதனால் நகரம் முழுவதும் விழாக்கோலம் காணப்படும்.

அங்கங்கே கண்காட்சித் திடல்கள், சர்க்கஸ் கூடாரம் என ஊரே குதூகலிக்கும். அதிகப்படியான கூட்டம் என்று சொல்ல நினைத்தால் ‘மகாமகக் கூட்டம்’ என்றுதான் சொல்வார்கள். அத்தகைய கூட்டத்தை, திரள் திரளான மக்களின் மகிழ்ச்சி சிரிப்பொலியாக ஏரி முழுக்க
எதிரொலித்தது. திருவிழா என்றால் கேளிக்கைகள் இல்லாமலா இருக்கும். இங்கும் இருந்தது. ஏரியின் முகப்பில் சூடான ‘சாக்லேட்’ பானம் தொண்டைக்கு இதமளித்தது. எந்தப் பக்கம் போவதென்றே தெரியவில்லை.

காரணம், அந்த இருட்டில், மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அங்கங்கே தீ மூட்டுதலில், மக்களின் தலைகள்தான் தெரிந்தது. ஒரு பக்கம் நீண்ட வரிசை. பனிச்சறுக்கில் பங்கெடுப்பவர்களுக்கு பச்சை, நீலம், சிவப்பு என கழுத்தில் தொங்க விடும் ‘லேசர்’ விளக்குகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஏரி முழுவதும் விளையாட்டுக்கள் நடைபெறுவதால், ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொள்ளாமல் இருக்கத்தான் இந்த விளக்குகள்.
பெரிய பெரிய மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டு அவற்றிற்கு பார்டர் அமைப்பதுபோல் அலங்கார வடிவங்களில் கண்ணாடிக் குடுவைகள் போன்று
மறைப்புகள் காணப்பட்டன.

அதுவே பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகு. பெரிய பெரிய வட்டங்கள் போன்று, நிறைய இடங்களில் வண்ணமயமாக ஜொலித்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்படிப்பட்ட இருளில் இந்த மாதிரிக்கூட்டம். அதுவும் உறைந்த ஏரிமேல் என்பதை நம்பவே முடியவில்லை. அனைவர் முகத்திலும் ஒரே சந்தோஷம்தான். அங்கங்கே நிறைய கடைகள் காணப்பட்டதால், அவரவர் வயிற்றுப்பசியையும் போக்கிக்கொண்டனர். சிறிது குளிர் அடிப்பதுபோல் தோன்றினாலும், பக்கத்திலுள்ள தீ மூட்டும் இடத்தில் சிறிது நேரம் நின்றால் போதும். இப்படியாக பாதி ஏரியைக் கடந்ததே, ஒரு சாதனை மிகுந்த அனுபவமாக இருந்தது.

மழைத்தூறலில் நின்றால்கூட, ‘ஜலதோஷம்’ பிடிக்கும் என்று நினைக்கும் நாம் இப்படி உறைந்த ஏரியில் நடக்கும் போது அது எல்லாம் மறந்துவிடும். இதுபோன்ற பிரயாணங்களில் பலவற்றைக் கற்றாலும், இத்தகைய அனுபவம் புதுமையாக இருந்தாலும், ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. பெரியவர்கள் ஒரு புறம் மகிழ்ந்து கொண்டு இருக்க, மறுபுறம் முழுக்க குழந்தைகள் காணப்பட்டனர். ‘மெரினா’ கடற்கரையில் மணல் கோபுரம் கட்டி விளையாடுவதுபோல், அவர்கள் ஐஸ் துகள்களில் வித்தைகள் செய்துகொண்டிருந்தனர்.

கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். நடுத்தர வயதுக்குழந்தைகள் சறுக்கு விளையாட்டையும், ‘துடுப்பு’ வைத்துக்கொண்டும் விளையாடினர். இப்படியாக பலவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டே ‘நெருப்பு நடனம்’ பகுதியினை அடைந்தோம். இதைப்பார்ப்பதற்கு, வீட்டிலிருந்து ‘மொபைல்’ நாற்காலிகள் எடுத்துவந்து அமர்ந்திருந்தனர் ஒரு கூட்டத்தினர். குழந்தைகள் நிறைய பேர் ஆர்வத்துடன் அமர்ந்து ‘தீ நடனத்தை’ பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு குழுவில் ஏழு அல்லது எட்டு பேர் இருக்கலாம்.

ஒவ்வொருவரும் கைகளில் தீயை வைத்துக்கொண்டு சுற்றிச்சுற்றி விதவிதமான நடனங்கள் அரங்கேற்றினர். இரு கைகளிலும் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு, கால்களுக்கு அடியிலும், தலைக்கு மேலும் மிக வேகமாக உடற்பயிற்சி செய்வதுபோல் செய்துகொண்டேயிருந்தனர். தீயை தூக்கி வாயிற்குள் போட்டு வெளியே எடுத்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதுபோல் மாறி மாறி விதவிதமான வித்தைகளை செய்து காட்டிக்கொண்டிருந்தனர்.

ஏரியின் எல்லா பகுதிகளிலும், வண்ண ஜாலங்களுடன் திருவிழாக் கோலமாக காட்சியளித்தது. அமெரிக்க மக்கள் எப்பொழுதுமே உழைப்பதில் சிறந்தவர்கள். அதுபோல் ஒவ்வொன்றையும் ரசித்து, குடும்பத்துடன் விடுமுறை நாட்களை உல்லாசமாகச் செலவிடுவர். ஆம். மனிதனாகப் பிறந்த நமக்கு ஒவ்வொன்றையும் ரசிக்கத் தெரிந்தால், துக்கங்கள், துயரங்கள் ஏன் தெரியப்போகிறது? ‘வாழ்க்கை வாழ்வதற்கே!’ என்பதை இத்தகைய அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

(பனி பொழியும்!)

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Tags : Winter Celebration ,
× RELATED குளிர்கால கொண்டாட்டம்!