மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை தீவிரம்: பில்லூர் அணை 2வது முறையாக நிரம்பியது

மேட்டுப்பாளையம்: தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் பில்லூர் அணை 2வது முறையாக நிரம்பியதால், இன்று அதிகாலை அணை திறக்கப்பட்டது. பவானி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள பில்லூர் அணை 100 அடி உயரம் கொண்டது. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பருவமழை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால், நேற்று இரவு 9 மணிக்கு மேல் அணையில் நீர் 97 அடியை எட்டியது.

இதன் மூலம், இந்த ஆண்டு 2வது முறையாக அணை நிரம்பியது. இதையடுத்,து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், ஆற்றில் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு இறங்க வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா கூறியதாவது: ‘மழை பொழிவு அதிகமாக இருக்கும்பட்சத்தில், பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, மறு உத்தரவு வரும் வரை பவானி ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம், கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’. இவ்வாறு அவர் கூறினார்.

 பில்லூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை சென்றடைகிறது. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளது. இதே நிலை நீடித்தால், பவானிசாகர் அணையும் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>