×

திமுக, அதிமுகவுக்கு அமமுகவினர் தாவல் எதிரொலி: டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா திடீர் தடை

சென்னை: அமமுகவினர் திமுக மற்றும் அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருவதால், கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருக்கும்படி டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா திடீர் தடை விதித்துள்ளார். அதிமுக பொது செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று போர்க்கொடி எழுந்ததால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த நிலையில் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். சசிகலா சிறை சென்ற போது ஆட்சியையும், கட்சியையும் பார்த்து கொள்ளுமாறு டி.டி.வி.தினகரனிடம் சொல்லி விட்டு சென்றார். டி.டி.வி. தினகரனின் தவறான நடவடிக்கையால் ஆட்சியும், கட்சியும் கை விட்டு போனது. ஆட்சியும், கட்சியும் எடப்பாடி, ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் வந்தது. இருந்தாலும் டி.டி.வி.தினகரனுக்கு 37 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. இதைத் தொடர்ந்து அதிமுகவுக்கு போட்டியாக அமமுகவை ஆரம்பித்தார். அப்போது அவருடன் 18 எம்எல்ஏக்கள் மட்டுமே சென்றனர். கட்சி மாறுதல் தடைச்சட்டத்தில் டி.டி.வி.தினகரன் பக்கம் போன எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது.

இதனால், அமமுகவை நம்பி வந்தவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சசிகலா டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இடைத்தேர்தலில் மட்டும் போட்டியிடுங்கள், அதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்றும் கூறி இருந்தார். ஆனால், சசிகலாவின் உத்தரவை மீறி பாராளுமன்ற தேர்தலில் அமமுக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது. படுதோல்வியை தான் அமமுக சந்தித்தது. அதே போல இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. தன் பேச்சை மீறி போட்டியிட்டதால் தான் பாராளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வி அடைய நேரிட்டது என்று டி.டி.வி.தினகரன் மீது கடும் கோபத்தில் சசிகலா இருந்து வந்தார்.

தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் அமமுக தனித்தே தேர்தலை சந்தித்தது. இதிலும் அமமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்வியை அடுத்து அமமுகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேற தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் திமுக மற்றும் அதிமுகவில் சேர தொடங்கினர். முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறியதால் அமமுக கூடாரமே காலியானது. முக்கிய நிர்வாகிகள் வெளியேறியதால் சசிகலா, டி.டி.வி.மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். அது மட்டுமல்லாமல் டி.டி.வி.எடுத்த தவறான நடவடிக்கையால் தான் தேர்தலில் தோல்வியடைய நேரிட்டது என்றும் அமமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் தெரிவித்தனர்.

இதனால், சசிகலா, டி.டி.வி. மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்த நிலை இப்படியே நீடித்தால் அமமுக என்ற கட்சி காணாமல் போய்விடும் என்று சசிகலா எண்ண தொடங்கினார். இந்த நிலையில் சசிகலா டி.டி.வி.தினகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கொஞ்சம் காலம் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருங்கள். கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. சசிகலாவின் உத்தரவை அடுத்து டி.டி.வி.தினகரன் அண்மை காலமாக பெயரளவுக்கு மட்டுமே ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.

அது மட்டுமல்லாமல் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க தொடங்கியுள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதையும் நிறுத்தி கொண்டார். சசிகலாவின் இந்த நடவடிக்கையால் அமமுகவினர் அதிர்ந்து போய் உள்ளனர். அது மட்டுமல்லாமல் தற்போது கட்சி நடவடிக்கையில் தனது அண்ணன் மகன், தனது கணவரின் தம்பிகளை சசிகலா ஈடுபடுத்த தொடங்கியுள்ளார்.

Tags : Thimu ,Sasikala ,Dinakaran , Echo of DMK, AIADMK taboo: Sasikala abrupt ban on DTV Dinakaran
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...