கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளை சேர்ந்த 11,000-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

டோக்கியோ: கோலாகலமாக டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது. உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஈடில்லா ஈர்ப்பு சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 1896ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உலக போர் காரணமாக 3 முறை ரத்தானது. கடைசியாக 2016ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. தற்போது, 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

‘உணர்வுகளால் ஒன்றுபடுவோம்’ என்ற முழக்கத்துடன் ஒட்டு மொத்த தொடக்க விழா நடக்கிறது. தற்போது கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் நடப்பதால் புதியதாக ‘முன்னோக்கி செல்வோம்’ என்ற வாசகமும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மைதானத்தில் 950 பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். கடந்தாண்டு நடக்க வேண்டிய இந்த போட்டி கொரோனா தொற்றால் முதல் முறையாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்க உள்ளது. மற்ற ஒலிம்பிக் போல இல்லாமல் டோக்கியோ போட்டி முற்றிலும் வித்தியாசமாக இருக்க போகிறது.

எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் மூலம் உலகத்தை ஒன்றாக இணைக்கிறது இந்த ஒலிம்பிக். ஜப்பான் தேசிய மைதானத்தில் நடக்கும் தொடக்க விழா 3 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,238க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

அடுத்த 15 நாட்கள் 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள். ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் தொடக்க விழாவில் முக்கியத்துவம் பெறும். கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம்  ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கி விடும். விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து செல்வார்கள். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தொடக்க விழாவில் இந்திய தரப்பில் 6 அதிகாரிகள், 22 வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே அதிரும். ஆனால் கொரோனா மிரட்டலால் இம்முறை ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒலிம்பிக் நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அதே சமயம் 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் ஏறக்குறைய ஆயிரம் மிக முக்கிய பிரமுகர்கள் விழாவை கண்டுகளிக்க உள்ளனர். இதில் ஜப்பான் மன்னர் நருஹிட்டோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோரும் அடங்குவர்.

இந்த ஒலிம்பிக் திருவிழாவால் ஜப்பானியர்கள் பரவசமடைந்தாலும், மற்றொரு புறம் கொரோனா பரவலை நினைத்து பீதியிலேயே உள்ளனர். அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு இருந்த போதிலும் டோக்கியோவில் தொற்று அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்காக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ள ஜப்பான் அரசு, பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி பெருமையை நிலைநாட்டுவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது. எனவே இந்த போட்டிகள், வீரர்களுக்கு மட்டுமல்ல, போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டிக்கும் கடும் சவால் நிறைந்ததாகவே அமையும்.

ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக அமெரிக்கா 613 பேரை களம் இறக்குகிறது. அவர்களே பதக்கவேட்டையில் முதல்வனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் முதன் முறையாக அதிகபட்சமாக 125 வீரர், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு படையெடுத்துள்ளனர். அவர்கள் மொத்தம் 18 வகையான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பயிற்சியாளர்கள், நிர்வாகிகளை சேர்த்து 228 பேர் கொண்ட இந்திய குழு செல்கிறது. தங்களது திறமையை காட்ட தயாராக உள்ளனர். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஹாக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.

2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 2 பதக்கம் மட்டுமே கிடைத்தது. இம்முறை நிச்சயம் கூடுதலாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த 15 நாட்களும் ரசிகர்களின் ஒட்டு மொத்த கண்களும் டோக்கியோ நோக்கியே திரும்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

நேரடி ஒளிபரப்பு

ஒலிம்பிக் போட்டியை தூர்தர்ஷன், டிடி ஸ்போர்ட்ஸ், சோனி சிக்ஸ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. டிடி ஸ்போர்ட்சில் தினமும் அதிகாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை நேரலையாக போட்டிகள் ஒளிபரப்பப்படும். தவிர இரவு 8.30 மணி முதல் ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமான சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம் பெறும். மொத்தத்தில் இந்த ஒலிம்பிக் திருவிழா ரசிகர்களை வெகுவாக கவருவதாக உள்ளது.

Related Stories:

More
>