×

கோயில்களில் காணிக்கையாக கிடைக்கப்பெற்ற நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டாக்கி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டம் : அமைச்சர் சேகர்பாபு

சேலம் : தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சேலத்தில் அளித்த பேட்டி:
அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான 50 ஆயிரம் இடங்களில் வாடகை வசூல் நிலுவையில் உள்ளது. அதனை வசூலிக்கும் பணியும், கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றும் பணியும் மேற்கொண்டுள்ளோம். அனைத்து கோயில் நிலங்களின் எல்லையை வரையறை செய்து, அங்கு அறிவிப்பு பலகை வைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களுக்கு பொருளாதாரத்தை ஈட்ட நிலங்களை குத்தகைக்கு விடுவது, நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுப்பது போன்ற பணிகள் வெளிப்படை தன்மையோடு மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம் திருக்கோயில்களுக்கான செலவினத்தை செய்திட வருவாய் கிடைக்கும்.
தமிழக கோயில்களில் பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப்பெற்ற தங்க நகைகள் கடந்த 9 ஆண்டுகளாக உருக்கப்படாமல் உள்ளது. அந்த தங்கநகைகளை கோயில்களின் தேவைக்கு போக மீதியுள்ளவற்றில் விலை உயர்ந்த கல், அரக்கு போன்றவற்றை தனியாக பிரித்து, மும்பையில் உள்ள இந்திய அரசின் அனுமதி பெற்ற ஆலையில் உருக்கி தங்க பிஸ்கட்களாக மாற்றவுள்ளோம். அந்த தங்கபிஸ்கட்களை வைப்புநிதியாக வைத்து 2.5 சதவீத வட்டி கிடைக்க செய்யப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு ₹20 கோடி அளவிற்கு வட்டி கிடைக்கும் சூழல் இருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தனிக்குழு ஏற்படுத்தப்படுகிறது.

மக்களாட்சி வந்தபின், அரசு கோயில்களை நிர்வகிக்கிறது. இப்படி இருக்கையில் தனியாருக்கு கோயில்களை கொடுக்க வேண்டும் என பாஜ கூறுவது எப்படி சரியாகும்? கோயில்களை டெண்டரா விட முடியும். குழப்பத்தை ஏற்படுத்தவும், தாங்கள் இருக்கிறோம் என நிலை நிறுத்திக் கொள்ளவும், பாஜ தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறது.அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதேபோல், 5 ஆண்டுகளுக்கு மேல் கோயில்களில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Tags : Gold Biskataki deposit fund ,Minister ,Sergabu , அமைச்சர் சேகர்பாபு
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...