×

இலங்கை தமிழர் விருப்பமின்றி தமிழக அரசு தாயகம் அனுப்பாது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

தண்டையார்பேட்டை: இலங்கை தமிழர்கள் விருப்பமின்றி அவர்களை தமிழக அரசு தாயகம் அனுப்பாது என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை சார்பில், இலங்கை தமிழ் அகதிகள் முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயராணி, அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

இதையடுத்து, இலங்கை தமிழர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணமாக ₹4 ஆயிரம் வழங்கி அமைச்சர் மஸ்தான் பேசியதாவது: தமிழ்நாட்டில்  உள்ள 108 அகதி முகாம்களில் 106 முகாம்கள் அரசின் கட்டுப்பாட்டிலும், 2 முகாம்கள் காவல்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. ₹5 கோடியே 42 லட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற உள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தருவதுதான் முதல்வரின் விருப்பம். அதுகுறித்து பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் பேசியுள்ளார்.

தாயுள்ளத்தோடு நேசிக்கும் தமிழ்நாடு, இலங்கை தமிழர்களுக்கு என்றும் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் விரும்பும் வரை இங்கு நிம்மதியாக இருக்கலாம். இலங்கை தமிழர்கள் விருப்பமின்றி அவர்களை தமிழக அரசு தாயகம் அனுப்பாது. உங்களுக்கான உதவிகள், உரிமைகள், சிறப்பு சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும் இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Tags : Government of Tamil Nadu ,Tamils ,Minister ,Ginger Masdan , Government of Tamil Nadu will not send homeland without the consent of Sri Lankan Tamils: Minister Ginger Mastan's speech
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...