அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்..!!

ஈரோடு: அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியார்துறையிடம் ஒப்படைப்பதை கண்டித்தும் ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு சேவை துறையில் அவசர சட்டம் கொண்டு வருவதன் மூலமாக  நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தி செய்யும் 40 தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடுவதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அவசர சட்டம் கொண்டு வருவதன் மூலமாக மோடி அரசு சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதாகவும் எந்த நாட்டிலும் பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் நாட்டின் சேவை நிறுவனங்களுக்கான காப்பீடு, வங்கி, மின்சாரம், போக்குவரத்து, ரயில்வே, பாதுகாப்புத்தளவாட உற்பத்தி என அனைத்து துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பதற்கு எதிராக கண்டனங்களை முழங்கினர்.

இதில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட தொழில் சங்கத்தினர் பங்கெடுத்தனர். இதனிடையே நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

Related Stories:

More
>