×

கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்டது: 6 மாதங்களில் குண்டும், குழியுமான தார் சாலை: நெமிலியில் அதிகாரிகள் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

நெமிலி: நெமிலி அருகே குண்டும்,குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் இருந்து  பெருவளையம்  வழியாக சிறுவளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையின் வழியாக சிறுவளையம், கர்ணாவூர், புதுப்பட்டு, வேடந்தாங்கல் மற்றும் உளியநல்லூர் உட்பட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.

இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில்,  கடந்த 6மாதத்திற்கு முன்பு அதிமுக ஆட்சியில்  போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். விவசாயிகள் தினமும் விளை நிலத்தில் பயிரிடப்படும் காய்கறிகள், பூக்கள் மற்றும் பழ வகைகளை பனப்பாக்கம் வழியாக காஞ்சிபுரத்திற்கு எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர்.

அதிகாலை 4 மணியளவில் மற்றும் இரவு 10 மணியளவிலும்  விவசாயிகள் பைக்கில் மார்க்கெட்டுக்கு செல்லும்போது குண்டும் குழியுமாக உள்ள சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tar Road ,Nemili , Nemili, tar road, people, demand
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...