×

தொடரும் சாரல் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி: குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக இதமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் பெய்தது. இதமான காற்றும் வீசியது. கடந்த சில வாரங்களாக சாரல் இல்லாமல் வெயிலடித்து வந்த நிலையில், தற்போது நிலவும் சூழல் சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தியது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் 2வது ஆண்டாக இந்த ஆண்டும் சீசன் காலத்தில் குளிக்க தடை நீடிக்கிறது. தடையை மீறி அருவி பகுதிக்கு யாரும் சென்று விடாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள விவரம், பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்ட நிலையிலும், பலரும் குடும்பத்துடன் அருவியை பார்வையிட வருகை தருகின்றனர். ஆர்ப்பரித்து விழும் தண்ணீரை குடும்பத்துடன் சிறிது நேரம் பார்வையிட்டு செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு குளிக்க முடியாத ஏமாற்றத்தில் திரும்பிச் செல்கின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் அமைந்துள்ள இயற்கை மற்றும் செயற்கை அருவிகளில் சுற்றுலா பயணிகள் கட்டணம் பெற்றுக் கொண்டு குளிக்க அனுமதிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் அவற்றை கண்காணித்து கட்டுப்படுத்தினர். மெயினருவியை பொருத்தவரை தடுப்புகளை மீறி யாரும் குளித்து விடாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உடலில் பொருத்தி கண்காணிக்க கூடிய காமிரா வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் சிலர் மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி வருகிறது.

Tags : Courtallam , Courtallam Falls, Irrigation, Increase
× RELATED குற்றாலத்தில் ஒரு வாரமாக...