அண்ணாமலையார் கோயிலை சுற்றிலும் தேரோடும் மாடவீதியை தரம் உயர்த்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றிலும் தேரோடும் மாடவீதியை தரம் உயர்த்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அதிகாரிகள் நேற்று அதிரடியாக ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள மாடவீதியை, முற்றிலுமாக சீரமைத்து கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தவும், சாலையில் இருபுறமும் இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி, புதைவட மின் பாதையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தமது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.

அதோடு, திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, மாடவீதி தரம் உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உறுதியளித்திருந்தார். அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் தேரோடும் மாட வீதிகள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் தொடங்கியிருக்கிறது. அதற்காக, கடந்த மாதம்  சாலை அளவீடு உள்ளிட்ட முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக, மாட வீதிகளை அகலப்படுத்துவற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.  

நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையினர் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட்டனர். தேரடி வீதி, பெரிய தெரு, திருவூடல் தெரு, பே கோபுர தெரு ஆகியவற்றில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நேற்று அகற்றப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், சாலையை தரம் உயர்த்துவதற்கான திட்ட மாதிரி உருவாக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து, கான்கிரீட் சாலை அமைத்தல், மின் கம்பங்களை மாற்றி அமைத்தல், சாலையின் இருபுறமும் நடைமேடை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>