×

ஒன்றிய அமைச்சர் கையில் இருந்த காகிதங்களை பறித்து கிழித்து எறிந்த திரிணமூல் எம்.பி. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்


டெல்லி: மத்திய அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பறித்து கிழித்து எறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி, 2 ஒன்றிய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டு, தகவல் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘பெகாசஸ்’ தொடர்பான அறிக்கையை வாசிக்க எழுந்தார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் திடீரென அமைச்சர் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்தெறிந்து காற்றில் பறக்கவிட்டார். ஆவணங்கள் காற்றில் பறந்ததால், அமைச்சர் தனது அறிக்கையை படிக்க முடியாமல், அதன் நகலை சபையில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், மாநிலங்களவை கூடியதும் ஷாந்தனுவை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பறித்து கிழித்து எறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் மீது மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார். மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் சாந்தனு சென் பங்கேற்க வெங்கையா நாயுடு தடை விதித்தார்.அப்போது அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறியதாவது:‘‘மாநிலங்களவையில் நேற்று நடந்த சம்பவங்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சர் கையில் இருந்த காகிதங்களை கிழித்து எறிந்த செயல் அவையில் இதுவரை இல்லாத அளவு நடந்த மோசமான சம்பவமாகும். நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இழுக்கானது. துரதிருஷ்வசமானது’’ எனக் கூறினார்.இதனைத் தொடர்ந்து சாந்தனுவை மழைகாலக் கூட்டத்தொடர் முழுவதும் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


Tags : Trinamool ,Minister , திரிணாமுல் காங்கிரஸ்
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றியை...