×

கொரோனா தடுப்பூசி போட கொட்டும் மழையில் மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

ஊட்டி: ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து காத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே ஒரே ஆயுதமாக உள்ளது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை குறைந்த நீலகிரி மாவட்டத்தை பொருத்த வரை பழங்குடியின மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடும் இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளது. தற்போது தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள், எத்தனை டோஸ் செலுத்தப்பட உள்ளது என்பது போன்ற தகவல்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியில் நேற்று வரை 3.71 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் மாவட்டம் முழுவதும் நேற்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்தன. ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகள், 10 பேரூராட்சி பகுதிகளில் நேற்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டன. 8200 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த சூழலில் ஊட்டி நகரில் பிரீக்ஸ் பள்ளி மற்றும் அரசு கலை கல்லூரியில் தலா 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் காலை 7 மணி முதல் இம்மையங்களுக்கு வந்தனர். முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.

அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது டோக்கன் பெறாதவர்களும், கடந்த வாரங்களில் டோக்கன் வாங்காதவர்களும் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் முறையாக டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே, மற்றவர்கள் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால், டோக்கன் பெறாதவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின், டோக்கன் பெற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தடுப்பூசி போட கூட்டம் அதிகளவு கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : The corona vaccine is being pushed as people congregate in the pouring rain
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...