×

கொரோனாவின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பின் 2ம் கட்ட ஆய்வுக்கு சீனா கடும் எதிர்ப்பு : இது பொறுப்பற்ற செயல் என அமெரிக்கா கண்டனம்!!

பெய்ஜிங் : கொரோனாவின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பின் 2ம் கட்ட ஆய்வை சீனா மறுப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சீனாவுக்கு நேரில் சென்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் வூகானில் உள்ள ஆய்வகங்கள், சந்தைகளில் 2ம் கட்ட ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, சீன அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த சீன சுகாதாரத்துறை அமைச்சகம், 2ம் கட்ட ஆய்வுக்கு ஒத்துழைக்க போவதில்லை என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுக்கு சீனா தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாம் ஆய்வுக்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பது ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சீனாவின் நிலைப்பாடு பொறுப்பற்ற ஒன்று மட்டுமல்ல ஆபத்தானதும் கூட,என்றார். உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம் என்று உலக நாடுகள் பலவும் குற்றம் சாட்டி வருகின்றன. கொரோனா கிருமியின் தோற்றம் குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் 2ம் கட்ட ஆய்வுக்கு சீனா ஒத்துழைக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : China ,WHO ,US , கொரோனா
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்