×

இந்தியாவில் இன்னும் 65% மக்கள் ஒரு தவணை கொரோனா தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை : ஆய்வில் அதிர்ச்சி

டெல்லி : இந்தியாவில் இன்னும் 65% ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தப்படாத நிலையில், ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை கடந்த ஜனவரி 16ம் தொடங்கியது.இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அதாவது 94 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு முதற்கட்டமாக சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு  தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டது.

ஏப்ரல் 1ம் தேதி 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. ஒன்றிய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து விநியோகித்த நிலையில், மே 1ம் தேதி முதல் மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும் தலா 25% தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டது. தட்டுப்பாடு, விநியோகத்தில் குளறுபடி என பல்வேறு புகார்கள் எழுந்ததால் ஜூன் 21 முதல் 75% தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்க தொடங்கியது.  

ஜூலை 22ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 8.78 கோடி பேர் முழுமையாகவும் 24.22 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 65%பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை. தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 754 மாவட்டங்களில் 640 கிராமப்புற மாவட்டங்களில் மட்டுமே சுமார் 60% மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவின் நகர்ப்புறங்களில் 10 லட்சம் பேரில் 4,477 பேரும் கிராமப்புறங்களில் 10 லட்சம் பேரில் 2,799 பேரும் நாள் தோறும் சராசரியாக தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.இதன்படி நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் 40% குறைவாகவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Tags : India , இந்தியா
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!