சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்க ரூ.2,467 கோடி நிதி ஒதுக்கீடு!: ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் அறிவிப்பு..!!

டெல்லி: சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்க 2,467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக எம்.பி.தயாநிதிமாறன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்க ஒதுக்கப்பட்ட 2,467 கோடி ரூபாய் நிதியில் இதுவரை 646.26 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். டிசம்பருக்குள் முதற்கட்ட பணிகள் நிறைவுபெறும் என்று வி.கே.சிங் கூறியுள்ளார். 2வது கட்ட பணிகள் 2023ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க 146 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் மற்றும் விமானங்களை நிறுத்துமிடம் கட்டுமானத்திற்காக 951.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வி.கே.சிங் அறிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 380.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரை, சேலம், வேலூர் ஆகிய விமான நிலையங்களிலும் பல்வேறு திட்ட பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>