×

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க இடம் தேர்வு: வருவாய்த்துறையினர் தகவல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், விரைவில் பணி தொடங்கப்பட உள்ளது. அந்த தொழிற்சாலையில், படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி கடம்பாடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அடங்கியது. மேலும், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 54 ஊராட்சிகளில் டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங், பிளஸ் 2 முடித்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளனர். அவர்கள், வேலைக்காக செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி, மறைமலைநகர், காஞ்சிபுரம் அடுத்த ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், திருப்போரூர்    அடுத்த புதுப்பாக்கம், நாவலூர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு செல்கின்றனர்.
மேலும், ஒரு சில இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை தேடி அலைகின்றனர்.

வேலை வாய்ப்புக்கு நீண்ட தூரம் செல்வதை தவிர்க்கவும், வேலை வாய்ப்பு இல்லாத இடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, மாநில சிறு தொழில் வளர்ச்சி கழகம் சிப்காட் எனும் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அந்நிறுவனம் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இடம் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி கடம்பாடி கிராமத்தில் சர்வே எண் 267ல் 4 1/2 ஏக்கரும், 268ல் 23 1/2 ஏக்கரும் என மொத்தம் 28 ஏக்கர் இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து, தமிழக அரசிடம், பரிந்துரை செய்துள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏராளமான படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உள்ளனர். இவர்கள், வேலைக்காக வெகுதூரம் உள்ள மகேந்திரா சிட்டி, மறைமலைநகர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், அதேப்போல், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம், நாவலூர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஏராளமான பெண்கள் படித்து முடித்துவிட்டு, வீட்டில் முடங்கியுள்ளனர்.  தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களின் நலனை கருத்தில் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி கடம்பாடி கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டையை கொண்டு வந்துள்ளது.

மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் வரபிரசாதமாக உள்ளது. இந்த சிப்காட் 28 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. விரைவில், பணி தொடங்க உள்ளதாக வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, சிப்காட் பணி தொடங்கும்போது இளைஞர்கள் மற்றும் பெண்கள் மட்டுமின்றி கொத்தனார், பிளம்பர், வெல்டர், டிரைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே, தமிழக அரசு மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனர்.

Tags : SIDCO ,Industrial Estate ,East Coast Road ,Mamallapuram , Mamallapuram, East Coast Road, SIDCO Industrial Estate, Revenue Department
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்