×

மத்திய சீனாவில் கொட்டித் தீர்த்த மழை, வெள்ளம் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு: மீட்பு பணியில் 24 ஆயிரம் வீரர்கள் விரிசல் விட்ட அணையில் நீர் திறப்பு

பீஜிங்: சீனாவில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 பேர் காணாமல் போய் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஒரே நாளில் அப்பகுதி முழுவதும் வெள்ளக் காடானது. இதனால், ஹெனான் மாகாணத்தில் மட்டும் 30 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதித்துள்ளனர். இதில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 3.76 லட்சம் பேர் வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான கார்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் 2.15 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால், ரூ.1400 கோடிக்கு நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

செங்சாவ் நகரில் ஆறு, ஏரிகளின் நீர் மட்டம் தொடர் மழையினால் உயர்ந்து விட்டதால், அப்பகுதியில் உள்ள அணைகள் சேதமடைந்துள்ளன. இதனால் எப்போது வேண்டுமானாலும் அவை உடையும் அபாயத்தில் உள்ளதால், அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, குடிக்க கூட நீரின்றி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.ஹெனான் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கி உள்ளது. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 200க்கும் அதிகமான வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை சீன ராணுவ வீரர்கள் மீட்டு வருகின்றனர். மேலும், ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரேநாளில் 457 மிமீ மழை கொட்டித் தீர்த்ததால் பாதிக்கப்பட்ட செங்சாவ் நகரில், வெள்ளம் வடிந்து வருகிறது. மக்கள் வீடுகளின் கூரை மீதும், உயரமான கட்டிடங்களின் மீதும் ஏறி நிற்கின்றனர். அவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் வடிந்த பகுதிகளில் சேரும், சகதியுமாக உள்ள பொருட்களை மீட்டு வருகின்றனர்.

இந்தியா, சீனாவுக்கு பெரிய ஆபத்து
பிரான்ஸ் நாட்டின் நோட்ரே டேம் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், `பருவநிலை மாற்றம், காற்று மாசுவால் உலகில் அதிகம் பாதிக்கப்படும் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா இடம் பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இந்நாடுகளில் பெய்த தொடர் கனமழை, வெள்ளம், அடிக்கடி வீசிய புயல், சூறாவளி, அதிக வெப்பம் ஆகியவை இந்நாடுகள் சந்திக்க உள்ள காற்று மாசு, பருவநிலை மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. உலக நாடுகளில் காற்று மாசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் 23.5 சதவீதத்துடன் இந்தியா 5வது இடத்திலும், 17.9 சதவீதத்துடன் சீனா 13வது இடத்திலும் உள்ளன. இதனால், காற்று மாசு, பருவநிலை மாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்படும் ஆபத்து நிறைந்த நாடுகளாக இரு நாடுகளும் உள்ளன,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Central China , Central China, rain, flood, death, cracked dam
× RELATED மத்திய சீனாவில் கொட்டித் தீர்த்த மழை,...