×

பிராந்திய மொழியில் பொறியியல் கல்வி தமிழகம் உட்பட 14 மாநில கல்லூரிகளுக்கு அனுமதி

புதுடெல்லி: இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அளித்த அனுமதியை தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பாடங்களை தொடங்குவதற்கு 14 கல்லூரிகள் அனுமதி பெற்றுள்ளன. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, வரும் கல்வியாண்டில் இருந்து பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. மேலும், தமிழ் உட்பட 11 பிராந்திய மொழிகளில் பாடங்களை அறிமுகம் செய்யவும் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதை பின்பற்றி, தாய்மொழி வழி கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், இந்த கல்வியாண்டு முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி, பஞ்சாபி, ஒரியா, இந்தி ஆகிய 11 பிராந்திய மொழிகளில் பி.டெக் பயிற்றுவிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் அனுமதியை பெற்றுள்ளன.

அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் 4, ராஜஸ்தானில் 2, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒரு கல்லூரி இந்தியில் கற்பிக்க உள்ளன. அதேபோல், தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்லூரிகள் முறையே தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் பாடங்களை கற்பிக்க உள்ளன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவினரின் ஒப்புதலின்படி, கணினி அறிவியல், எலெக்ட்ரானிக், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஐடி ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பொறியியல் படிப்புகள் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஈரோட்டை சேர்ந்த செங்குந்தர் பொறியியல் கல்லூரி, மெக்கானிக்கல், சிவில் பி.டெக் படிப்புகளை முழுக்க முழுக்க தமிழில் அளிக்க அனுமதி பெற்றுள்ளது.

Tags : Tamil Nadu , Regional Language, Engineering Education, Tamil Nadu, College
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...