ஹெலிகாப்டரில் பறந்தபடி இந்திய கடல் எல்லைகளை கடற்படை தளபதி ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வந்த கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அஜேந்திர பகதூர்சிங், பாக் ஜலசந்தியில் இந்திய கடல் எல்லை பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி நேற்று  ஆய்வு செய்தார். இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அஜேந்திர பகதூர்சிங், நேற்று உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திற்கு வந்தார். விமான தளத்தை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் கார் மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சென்று கடலோர பகுதிகளை பார்வையிட்டபின், பாம்பன் குந்துகால் துறைமுகத்திற்கு சென்றார்.

அங்கு நிறுத்தப்பட்டுள்ள கடற்படை ரோந்து படகுகளை பார்வையிட்டார். வீரர்களின் தற்காலிக கன்டெய்னர் தங்குமிடத்தை பார்வையிட்டு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்து கடற்படை ஹெலிகாப்டரில், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இந்திய கடல் எல்லை வரை சென்று கடல் மற்றும் கடலோரத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

 இலங்கையின் கடலோர பகுதியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசின் உதவியுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சீனா வியூகம் வகுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்படை தளபதி வான்வழியில் ஆய்வு நடத்தியது, கடற்படை மற்றும் மத்திய, மாநில பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories:

>