×

ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையின்போது சிறப்பு வசதி மாநகராட்சி பணிகளிலிருந்து உதவி கமிஷனர் விடுவிப்பு

மதுரை: ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகையை முன்னிட்டு சிறப்பு வசதிகள் செய்ய உத்தரவிட்ட உதவி கமிஷனரை, மதுரை மாநகராட்சி பணிகளில் இருந்து விடுவித்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். இவர் வரும் 26ம் தேதி வரை, மதுரை சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயில் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவரது வருகையை முன்னிட்டு சாலைகளை சீரமைத்து, தூய்மையாக வைக்குமாறு மதுரை மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம் (பணியமைப்பு) நேற்று முன்தினம் ஒரு உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவர் செல்லும் சாலைகளை கண்காணிக்கவும் உத்தரவிட்டார். அவரது இந்த உத்தரவு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். மேலும் உதவி கமிஷனர் சண்முகம் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் விளக்கமும் அளித்துள்ளார். அதில், ‘‘இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள பிரமுகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின்படி பணிகள் மேற்கொள்ளப்படும். சிறப்பு பணிகள் செய்யப்பட மாட்டாது. உயரதிகாரிகளின் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை வெளியிட்ட உதவி கமிஷனர் சண்முகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியில் அயற்பணியில் பணிபுரிந்து வரும் உதவி கமிஷனர் சண்முகம், மாநகராட்சி பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்’’ என தெரிவித்துள்ளார்.

Tags : Special Facility Corporation ,RSS , RSS leader, special facility, corporation work, Assistant Commissioner
× RELATED காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் லோகோ எதிர்க்கட்சியினர் கண்டனம்