மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு: போக்சோ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரின்பேரில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில அடைக்கப்பட்டுள்ளார். இவரை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இவருக்கு ஜாமீன் கோரியும், இவ்வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ள ஆசிரியை சுஷ்மிதாவுக்கு வேறொரு வழக்கில் முன்ஜாமீன் கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளும் கடந்த 19ம் தேதி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது.

சிவசங்கர் பாபா, ஆசிரியை சுஷ்மிதா தரப்பில் வழக்கறிஞர்கள் ரமேஷ், சந்தானம் ஆகியோர் ஆஜராகி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் கோரியும், ஆசிரியை சுஷ்மிதாவுக்கு முன்ஜாமீன் வழங்க கோரியும் வாதாடினர். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவையும், முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த  ஆசிரியை சுஷ்மிதாவின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தங்கள் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், சிவசங்கர் பாபா, ஆசிரியை சுஷ்மிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை நேற்று நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனை அறிந்த சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போக்சோ நீதிமன்ற வளாகத்தில் திரண்டு, சிவசங்கர் பாபாவை ஏற்றிவந்த போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும், அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதையடுத்து, செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி தடுத்து நிறுத்தினர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் சிவசங்கர் பாபாவை, நீதிபதி தமிழரசி முன்பு ஆஜர்படுத்தினர். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

>