மாதிரி நாடாளுமன்றம் நடத்தி அரசுக்கு எச்சரிக்கை டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: துணை ராணுவம் போலீஸ் குவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள 200 விவசாயிகள் மாதிரி நாடாளுமன்றத்தை கூட்டி, ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்தாண்டு நவம்பர் முதல், டெல்லியில் திக்ரி, சிங்கு, காஜியாபாத்தில் கடந்த 8 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு தீர்வு காண விவசாயிகளுடன் அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன.

அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் நேற்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர். இதற்கு ஆளுநர் அனில் பைஜால் அனுமதி அளித்தார். ஆனால், போராட்டத்தில் 200 விவசாயிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என டெல்லி காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதையடுத்து, நேற்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் வரை டெல்லி ஜந்தர் மந்தரில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது வன்முறை நடக்கலாம் என்பதால், டெல்லியில் 5 ஆயிரம் போலீசாரும், துணை ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்கும் 200 விவசாயிகள், சிங்கு எல்லையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் மூலம் ஜந்தர் மந்தருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்கள், ‘விவசாயிகள் நாடாளுமன்றம்’ நடத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

* பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு

ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கூறுகையில், ``விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று அழைக்கிறேன். புதிய வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளுக்கான திட்டத்துடன் வந்தால் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது,’’ என்றார்.

Related Stories:

>