×

அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பறித்து கிழித்த திரிணாமுல் எம்.பி 3வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்: செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்தில் தொடர் அமளி

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக அமைச்சர் அறிக்கை வாசிக்க முயன்றபோது, அவரது கையில் இருந்து பறித்து திரிணாமுல் எம்.பி கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இஸ்ரேல் என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி, 2 ஒன்றிய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டு, தகவல் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நாடாளுமன்றத்தில் ஏற்கனவே 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. பக்ரீத் விடுமுறைக்குப் பிறகு நேற்று 3வது நாளாக காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. கூட்டம் கூடியதும், பெகாசஸ் குறித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.

இதனால், இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடியது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘பெகாசஸ்’ தொடர்பான அறிக்கையை வாசிக்க எழுந்தார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் திடீரென அமைச்சர் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்தெறிந்து காற்றில் பறக்கவிட்டார். ஆவணங்கள் காற்றில் பறந்ததால், அமைச்சர் தனது அறிக்கையை படிக்க முடியாமல், அதன் நகலை சபையில் தாக்கல் செய்தார்.

அப்போது, அவையை நடத்திய துணைத் தலைவர் ஹரிவன்ஷ், ‘‘தயவு செய்து நாடாளுமன்றத்திற்கு எதிரான செயல்பாடுகளை கடைபிடிக்க வேண்டாம். அனைத்து எம்.பி.க்களும் கேட்க விரும்பும் அறிக்கை, இப்போது சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விவாதிக்கலாம். ஆனால், நீங்கள் விவாதத்தை விரும்பவில்லை. இது ஜனநாயக விரோதமானது,’’ என்றார். உரிய விளக்கம் அளிக்காமல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு தொடர்பாக கோஷங்களை எழுப்பி, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டு, இன்று காலை 11 மணிக்கு கூடும் என துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். இதேபோல், மக்களவையும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 4 மணி அவை மீண்டும் கூடியதும், தொடர் அமளி ஏற்பட்டதால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

* அடிக்க பாய்ந்த அமைச்சர்?
திரிணாமுல் எம்.பி சாந்தனு சென் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்து அறிக்கையை கிழித்தெறிந்தபோது, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் பூரி, ‘தன்னிடம் முரட்டுத்தனமாக சைகை காட்டி, அச்சுறுத்தியதோடு தகாத வார்த்தைகளால் திட்டினார். சக எம்பிக்கள் என்னை மீட்க வந்தபோது அவர் என்னைத் தாக்க முற்பட்டார்,’’ என்றார்.

* எம்பி.க்கள் மீது நடவடிக்கை
‘அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்து அறிக்கையை பறித்து திரிணாமுல் எம்பி கிழித்தெறிந்தார். சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஆளும்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஒரு அமைச்சருடன் தவறாக நடந்து கொண்டனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் முறையிட உள்ளோம்,’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒன்றிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

* ‘சூப்பர் அவசர நிலை’
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அமெரிக்கா ஜனாதிபதியாக நிக்சன் பதவி வகித்த காலத்தில் வெளியான வாட்டர்கேட் ஊழலை விட பெகாசஸ் ஸ்பைவேர் மோசமானது. நூற்றுக்கணக்கான இந்தியர்களின் மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதன் மூலம் ‘சூப்பர் அவசரநிலை’ சுமத்தப்பட்டுள்ளது பாஜ தலைமை தங்கள் சொந்த அதிகாரிகள், அமைச்சர்களை கூட நம்பவில்லை. ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்டதாக நான் கேள்விப்பட்டேன்,’’ என்றார்.

* போலி பட்டியல்
பாஜ ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலம் திருடப்பட்டதாகக் கூறப்படும் கதை இணைக்கப்பட்ட, புனையப்பட்ட கட்டுக்கதை. ஆதாரங்கள் இல்லாதவை. பெகாசஸ் திட்டத்துடன் தொடர்புடைய மனித உரிமைகள் குழுவான சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு, ஒட்டு கேட்பு நடந்திருப்பதை மறுத்துள்ளது. இது ஒரு போலி பட்டியல்.  மஞ்சள் பக்கங்களில் இருந்து வரையப்பட்ட மொபைல் எண்களின் தொகுப்பு, போலி பட்டியலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன,’’ என்றார்.


Tags : Trinamool ,Parliament , Trinamool MP snatches statement from minister, Parliament adjourned for 3rd day: Continues on cell phone tapping
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றியை...